திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள, நொச்சிவயல் புதுாரில் வசிப்பவர், தியாகராஜன், 50; திருவெறும்பூரில் பூக்கடை நடத்தி வருகிறார். சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்பதை, கனவாக கொண்டிருந்தார்.இலவசமாகஇதற்காக, பல ஆண்டு களாக கஷ்டப்பட்டு சேர்த்து, 10 லட்சம் ரூபாய் செலவில், புதிய வீட்டை நொச்சிவயல் புதுாரில் கட்டினார்.இதற்கு கிரகப் பிரவேசமும் செய்து, நல்ல நாளில் குடிபோகலாம் என, நினைத்திருந்தார்.இதற்கிடையில், அந்த ஊரில் செயல்பட்டு வந்த யூனியன் துவக்கப் பள்ளி கட்டடம், மிகவும் சேதம் அடைந்ததால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.அதுவரை பள்ளியை எங்கு நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.நொச்சிவயல் புதுாரில் யாரும், தற்காலிமாக பள்ளி நடத்த இடம் தர முன்வரவில்லை. இதனால், பள்ளியை, 5 கி.மீ., துாரத்திற்குள் வேறு ஊருக்கு மாற்ற திட்டமிடப்பட்டது.கடைசி முயற்சியாக, பள்ளி தலைமை ஆசிரியை லதா மகேஸ்வரி, புதிதாக கட்டப்பட்டுள்ள தியாகராஜன் வீட்டில் பள்ளி நடத்த அனுமதி கேட்டார். அதற்காக, வாடகையும் தருவதாக கூறியுள்ளார்.தன் ஊரைச் சேர்ந்த, 17 சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயம் என்பதால், மனைவியுடன் ஆலோசித்து, சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் கட்டிய வீட்டில் குடிபுகாத நிலையில், பள்ளியை இலவசமாக நடத்திக் கொள்ள சம்மதித்தார். பாராட்டுங்கள் இதன்படி, 2018 அக்டோபர் முதல், தியாகராஜனின் புதிய வீட்டில், பள்ளி நடந்து வருகிறது. இதுவரை அந்த வீட்டின் மின் கட்டணத்தையும், தியாகராஜனே செலுத்தி வருகிறார். இதையறிந்த கிராமத்தினர், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும், தியாகராஜனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மக்கள் சக்தி இயக்கமும், விழா நடத்தி பாராட்டு தெரிவித்துள்ளது.
கே.தியாகராஜன் கூறுகையில், ”நம்ம ஊர் குழந்தைகள் அலைந்து திரிந்து படிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், பள்ளியை தற்காலிகமாக நடத்த வீட்டை கொடுத்தேன். ”இன்னும் சில மாதங்களில், புதிய கட்டடம் ரெடியாகி விடும். அதுவரை காத்திருந்து, புதிய வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளேன்,” என்றார். தியாகராஜனுக்கு கலைவாணி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.