சித்தராமையாவுக்கு கல்தாவா, பூங்கொத்தா?

 

‘ஹிந்தி எதிர்ப்பு’,  ‘தனித் தமிழ்நாடு’ என்ற முழக்கங்கள் தமிழகத்தில் மட்டுமே இதுவரை ஒலித்து வந்தன. தற்போது கர்நாடகத்தில் சிலர் அதுபோன்ற பிரிவினைவாத கருத்துக்களை முழங்கத் துவங்கியுள்ளனர். கன்னடர்களின் தனித்தன்மையை அழிக்க முயற்சிப்பதாக சில கன்னட அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. கன்னட அமைப்புகள் தாங்கள் நடத்தும் போராட்டங்களில் சிவப்பு, மஞ்சள் கொடியை பயன்படுத்தி வருகின்றனர். இதையே கர்நாடக மாநில கொடியாக ஏற்றுக் கொள்ளலாமா என்பதற்காக முதலமைச்சர் சித்தராமையா 9 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளார். இந்தக் கொடி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால் கர்நாடகத்தில் தேசியக் கொடியும் மாநிலக் கொடியும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்றப்படும்.

கர்நாடகா மாநிலத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கேட்டால் அது புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் அவர் வெறும் கன்னட வெறியூட்டி அரசியல் செய்துவரும்  நபர். இந்திய விடுதலைக்கே நாங்கள்தான் மொத்த குத்தகை என்று பேசிவரும் காங்கிரஸ் கட்சியின் ஒரு முதலமைச்சரே மாநிலத்திற்கு ஒரு தனிக்கொடி தேவை என்று கேட்பது விபரீதம். இதை அனுமதித்தால் இதே கோஷம் எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கும் ஆபத்து இருக்கிறது. இந்த செய்தி வெளியான அன்றே இந்திய தேசிய லீக் எனும் முஸ்லிம் கட்சியின் நிர்வாகி நிஜாமுதீன் தமிழகத்திற்கு தனிக்கொடியும் தமிழுக்கென்று ஒரு நாளும் தேவை என்று தெரிவித்துள்ளார்.

ஒரே தேசம், ஒரே கொடி,  ஒரே மக்கள் என்ற அடிப்படையில் இந்தியா விளங்கி வருகிறது. இந்தியாவில் மாநிலங்கள் தனிக்கொடி பயன்படுத்த அரசியல் சாஸனத்தில் இடமில்லை என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விரைவில் வர இருக்கிற கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கு கன்னட உணர்வை தூண்டிவிட்டு அதை அறுவடை செய்யக் கணக்குப் போடுகிறார் சித்தராமையா. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா கருத்து என்ன?

சித்தராமையாவுக்கு கல்தாவா, பூங்கொத்தா?