வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நம் பார்வை மாற வேண்டும். ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடிக்கொண்டு இந்த உலகத்தை உங்கள் இதயத்தால் பாருங்கள், வெளிச்சமான உலகம் விரியும்! இயற்கையை இதயங்கள் கொண்டு தரிசிப்பவர்களுக்கு பாறையைப் பரிசாக கொடுத்தால் கூடஅதை பஞ்சு மெத்தையாக்கி படுத்துக் கொள்வார்கள். கண்களால் பார்ப்பவர்களுக்கு அது வெறும் கட்டாந்தரையாகவே தெரியும்.
ஒரு குருவிடம் இரண்டு சீடர்கள் பாடம் படித்து வந்தார்கள். குருகுல வாசம் முடிந்த பிறகு குருவிடம் போய் “குருவே உங்கள் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். உங்களுக்கு தட்சிணை கொடுக்க விரும்புகிறோம். தங்களுக்கு விருப்பமான பொருளைச் சொன்னால் கொண்டு வந்து தருகிறோம் என்றார்கள். முதலில் மறுத்த குரு சீடர்களின் வற்புறுத்தலுக்காக தட்சிைணயை ஏற்றுக்கொள்வதாக சொன்னார்.
“குருவே தங்களுக்கு விருப்பமான பொருள் எது என்று சொன்னால் அதைக் கொண்டு வந்து தருவோம்” என்று மீண்டும் சீடர்கள் கேட்டார்கள். அதற்கு குரு அருகிலுள்ள காட்டிற்கு சென்று யாருக்குமே பயன்படாத இரண்டு காய்ந்த இலைகளை, சருகுகளை கொண்டு வாருங்கள், அதுதான் எனக்கு மிகவும் பிடித்த தட்சிணை என்றார். சீடர்களுக்கு குழப்பம் ‘எதற்கு காய்ந்துபோன இலைகளை கேட்கிறார்?’ என்று குழம்பிக் கொண்டே அருகிலிருந்த காட்டிற்கு சென்றார்கள்.
காட்டுக்குச் சென்றவுடன் அங்கே அருகிலேயே கிடந்த இருந்த இரண்டு இலைகளை எடுத்தார்கள். அப்போது ஒரு பெரியவர் வேகவேகமாக ஓடிவந்து ”தம்பி, தம்பி, இந்த இலைகளை எடுக்காதீர்கள், இந்த இலைகளை எல்லாம் நான் சேகரித்து வீட்டிற்கு எடுத்துச் சென்று தைலம் தயாரித்து விற்கிறேன்! அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் என் குடும்பத்தை நடத்துகிறேன். எனவே எனக்கு இந்த இலைகள் வேண்டும், என்று சொல்லி இலைகளை வாங்கிக்கொண்டார்.
சீடர்கள் அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தூரம் நகர்ந்து சென்றார்கள். அங்கு சென்றவுடன் அங்கே இருந்த இரண்டு இலைகள் எடுத்தார்கள். இப்போது ஒரு பாட்டி வேகவேகமாக வந்து ”தம்பி தம்பி! இந்த இலைகளை எடுக்காதீர்கள்… நான் இந்த இலைகளை சேகரித்து வீட்டிற்கு எடுத்துச் சென்று தொன்னை தயாரித்து கோயில்களில் பிரசாதம் கொடுப்பதற்காக தருகிறேன். அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் என்னுடைய குடும்பத்தை நடத்துகிறேன். எனவே எனக்கு இந்த இலைகள் வேண்டும்” என்று வாங்கிக்கொண்டார். சீடர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
பரவாயில்லை, நடுக்காட்டிற்கு சென்றால் யாருக்குமே பயன்படாத இலைகள் கிடைக்கும் அதை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே சீடர்கள் நடுக்காட்டிற்குச் சென்றார்கள். அங்கே ஒரு அழகான காட்சி அவர்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு பறவை ஒவ்வொரு இலையாக எடுத்துக்கொண்டு போய் கூடு கட்டிக் கொண்டிருந்தது.சீடர்களுக்கு மிகவும் வருத்தம். யாருக்குமே பயன்படாத இலைகள் கிடைக்கவேயில்லை. குருவிடம் சென்று நாம் மன்னிப்பு கேட்டு விடலாம். தாங்கள் கேட்ட தட்சிணை எங்களால் கொடுக்க முடியவில்லை என்று சொல்லிவிடுவோம் என்று வருத்தப்பட்டுக் கொண்டே ஆசிரமம் நோக்கி சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு ஓடையை கடந்துதான் ஆசிரமத்தை அடைய வேண்டும்.
அப்போது ஓடையில் மறுபடியும் ஒரு காட்சி: காய்ந்து போன சருகு ஒன்று யாருக்குமே பயன்படாமல் ஆற்றோடு அடித்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தது. ‘அந்த இலையை யாருக்குமே பயன்படாமல் போகிறது’. அதை எடுத்துக் கொண்டு போய் நம் குருவிடம் கொடுத்து விடலாம். இரண்டு இலைகளுக்கு பதிலாக ஒரேயொரு இலையாவது கிடைக்கிறதே, அதுவே போதும். பரவாயில்லை, என்று நினைத்துக்கொண்டே அந்த சருகு காலடியில் வரும்வரை காத்திருந்தார்கள். கால்களுக்கு அருகே சருகு வந்தவுடன் குனிந்து எடுக்கச் சென்றபோது அந்த இலையின் மேல் ஒரு எறும்பு உட்கார்ந்திருந்தது. அந்த எறும்பு சொன்னது ”அண்ணா அண்ணா இந்த இலையை எடுக்காதீர்கள். இந்த இலைதான் எனக்கு உயிர் காக்க கூடிய படகாக இருந்தது, இந்த இலை இல்லையென்றால் நான் என்றோ ஆற்றோடு அடித்துக் கொண்டு போகப்பட்டு இறந்து போயிருப்பேன். என் போன்ற எத்தனையோ வழி தப்பிய எறும்புகளுக்கு இந்த இலை ஒரு படகாக பயன்படலாம். எனவே இந்த இலையை எடுக்காதீர்கள் என்று சொன்னது.
சீடர்களுக்கு அப்போதுதான் ஒரு உண்மை உறைத்தது.
ஒரு காய்ந்துபோன இலைக்கே இவ்வளவு மதிப்பு இருக்கிறது… தொன்னையாகப் பயன்படுகிறது. மருந்தாகப் பயன்படுகிறது. பறவைக்கு வீடாகப் பயன்படுகிறது. எறும்புக்கு படகாகப் பயன்படுகிறது. ஒரு காய்ந்து போன இலைக்கே இவ்வளவு மதிப்பு என்றால் ரத்தமும் சதையுமாக படைக்கப்பட்டிருக்கிற மனிதர்களாகிய நாம் எவ்வளவு மதிப்பு மிக்கவர்கள், இந்த உலகத்தில் நம்முடைய மதிப்பு எவ்வளவு உயர்ந்தது, நாம் ஏன் உலகத்தில் பிறந்தோம் என்று வருத்தப்படலாமா எவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருந்து சாதிக்கவேண்டும் என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள். குரு இதன் மூலம் மறுபடியும் நமக்கு ஒரு பாடம் நடத்தியிருப்பதை சீடர்கள் உணர்ந்துகொண்டு ஆசிரமத்திற்கு விரைந்தார்கள்.
பார்க்கும் பொருள்களை பரவசத்தோடு பார்ப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள்! வெற்றியை நோக்கி விரைந்து செல்கிறார்கள். நீங்கள் உலகை சீடர்களை போல உணர்ந்து கொண்டால் சருகுகளை சிறகுகள் ஆக்கிக்கொண்டு வெற்றி வானத்தில் வலம் வரலாம்!