சாமியே சரணம்! ஐயப்பா சரணம்! பார் பரசுராமா! முற்றுகையில் சபரிமலை!

மீண்டும் ஒரு மண்டல மகர திருவிழா காலம் வந்துவிட்டது. பாரதத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து மட்டுமின்றி,  உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் மேற்கொண்டு ஐயப்பனை காண புறப்பட்டாயிற்று.  பரசுராமர் பிரதிஷ்டை செய்த தர்மசாஸ்தா விக்கிரஹத்தில் ஐயப்பன்  ஐக்கியமாகி விட்டதாக ஐதீகம்.  பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கு மகரசங்கராந்தி பூஜை நடைபெற்று வருவதாக வரலாறுகள் கூறுகின்றன.

இத்தனை வரலாற்று சிறப்பும் தெய்வீகத்தன்மையும் பொருந்திய சபரிமலையை தொடர்ந்து சர்ச்சைக்கு இழுக்கின்றது ஒரு கூட்டம். அவர்களுக்கு ஒரே இலக்கு, சபரிமலையின் புனிதத்தையும் சிறப்பையும் களங்கப்படுத்தி, ஐயப்பனை நாடி வருகின்ற ஹிந்து பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.  ஒரு மண்டலகாலம் (41 நாட்கள்) விரதமிருந்து ஐயப்ப நாமம் கூறுகின்ற அப்பாவிகளை அவர்கள் இஷ்டத்திற்கு மதம் மாற்ற முடிவதில்லை. ஒரு வீட்டில் ஒரு நபர் ஐயப்பனுக்கு மாலை போட்டாலும் போதும்,  அந்த வீடே விரதத்தில் மூழ்கி விடுகிறது. 41 நாட்கள் சரணமுழக்கமும் பஜனையுமாக இல்லம் ஆலயமாக மாறுகின்றது.  இதை சகிக்கமுடியாத கயவர்கள்  கடந்த 70 -75 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி சர்ச்சையை உண்டாக்குகிறார்கள்.  தங்களின் பணபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி பல்வேறு துறைகளைச் சேர்ந்த மனிதர்களை விலைக்கு வாங்குகிறார்கள். லெட்டர் பேட் இயக்கங்களை உருவாக்கி , போராட வைக்கிறார்கள். ஐயப்பனின் அருளாசியாலும் ஹிந்து இயக்கங்களின் தீவிர கண்காணிப்பினாலும் ஒரு சில நல்ல அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் இதுவரை இந்த சதிக் கும்பல்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை .

சபரிமலையை 1950ம் ஆண்டு தீக்கிரையாக்கினார்கள். அங்கு இருந்த விக்கிரஹத்தை ஆறு துண்டாக தகர்த்து உடைத்தார்கள். இன்றைய தேதி வரை அந்த குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை.

ஐயப்பனின் பூங்காவனமாக கருதப்படுவது ‘நிலக்கல்’ . அங்கு ஒரு சிவன் கோயில் உள்ளது. அவ்விடத்தில் ஒரு சிலுவையை நாட்டி, அச்சிலுவை  மிக பழமையானது என்றும் ஐயப்பனுக்கு சபரிமலைக்கு வழிகாட்டிய ஒரு பாதிரி அங்கு உலவி வருவதாகவும் கற்பனை பரப்பினார்கள். வரலாற்று சிறப்புமிக்க நிலக்கல் போராட்டம் மூலம்,ஹிந்து இயக்கங்கள் அத்திட்டத்தை தகர்த்தெறிந்தன.

மாளிகைப்புரம் கோயிலுக்கு முன் ஒரு சிலுவை பூமியில் புதைந்துள்ளது என ஒரு கிறிஸ்தவனுக்கு கனவு வந்தது. அவன் அதை சொல்லி கோயிலின் வெளிப்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சிலுவையையும் கண்டெடுத்தான். அன்று பணியிலிருந்த நல்ல திறமையும் துணிச்சலும் மிக்க காவல் துறை அதிகாரிகள் சிலர் அவனை முறைப்படி விசாரித்ததில், உண்மை வெளிவந்தது. 3 நாட்களுக்கு முன் வேறொரு கிறிஸ்தவ நண்பன் புதைத்த சிலுவையை தான் இவன் எடுத்துக் கொடுத்தான். அவனுக்கு வந்த கனவு பொய் என்றும் ஒத்துக்கொண்டான். வழக்கு போடாமல் விட்டு விட்டனர் அதிகாரிகள்.

சபரிமலை  அரவணை (பாயசம்) பிரசாதத்தில் எலி வால் இருந்ததாக ஒரு புரளியை பரப்பினார்கள். அதுவும் பொய் என நிரூபணமாயிற்று.

சபரிமலையின் புகழையும் பழமையையும் தகர்த்து ஐயப்ப பக்தர்களின் வருகையை குறைக்கும் பொருட்டு முல்லைப்பெரியாறு உருவத்திலும் சில அரக்கர்கள் தோன்றியதை நாம் அறிந்திருப்போம்.

கேரள மாநிலம் ஆலப்புழைக்கு அருகில் சேர்த்தலை என்று ஒரு தாலுக்கா உள்ளது. அந்த தாலுக்காவிற்கு உட்பட்ட சிறிய கிராமம்  ‘ஆர்த்துங்கள்’. இந்த ஆர்த்துங்கள் என்ற கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ சர்ச் உள்ளது.  அந்த சர்ச் ஒரு மலர் வெளியிட்டுள்ளது. அதில் பாதிரி ஸ்டீபன் பழம்பச்சேரி ஒரு கட்டுரை எழுதுகிறார். தலைப்பு : ‘ஆர்த்துங்கள் வெளுத்தச்சனும் சபரிமலை  சாஸ்தாவும்’. 1584ம் ஆண்டு அந்த சர்ச்சின் பாதிரியாக  ஜக்கமோ பெனிஷவோ என்ற ஒரு நபர் இருந்தாராம்! அவர் ஐயப்பனின் உற்ற நண்பனாம்! ஐயப்பனை ஆயுதப்பயிற்சி கற்கும் களரி சங்கமான ‘சீரப்பன்சிற களரி’ யோகத்திற்கு அழைத்துச் சென்றாராம்!  ஆகவே ‘வெளுத்தச்சன்’ என ஐயப்பனாலேயே  அழைக்கப்பட்ட ஜக்கமோ பெனிஷவோ பாதிரியை வணங்கி விட்டு சென்றால் மட்டுமே ஐயப்ப யாத்திரை நிறைவுபெறுமாம்!  அப்பாவி ஐயப்ப பக்தர்கள் பலர் அங்கு சென்று, வெளுத்தச்சனை வணங்கிவிட்டு மாலை கழற்றி விரதத்தை முடித்துக்கொள்கிறார்கள்.

பொன்னம்பலமேட்டில் தை முதல் தேதி, ஜனவரி 14 அன்று காண்கின்ற மகர ஜோதி தரிசனத்தை கூட வீதிக்கு இழுத்தார்கள்.