சமுதாய சேவையில் இசையும் பண்பு

நெய்வேலி சந்தானகோபாலன் புகழ்பெற்ற  கர்நாடக சங்கீதக் கலைஞர். பாரம்பரியத்தை விட்டு விடாமல் அதேவேளையில் எளியோருக்கும் இசையின் பயன் சென்றடைய வேண்டும் என்று உவகையுடன் பணிபுரிபவர். தொலைக்காட்சி மூலம் பத்தாண்டுகளுக்கு மேலாக இசையை முறைப்படி கற்றுக் கொடுக்கிறார். ஸ்கைப் வழியாக பல நாட்டினருக்கும் கர்நாடக இசையைக் கொண்டு சென்றதில் இவர் முன்னோடி. எல்லாவற்றிற்கும் மேலாக பழகுவதற்கு இனியவர். உரையாடும் போது தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாக  பிறர் மனம் கோணாமல் நகைச்சுவை இழையோட வெளிப்படுத்துபவர். அவருடன் விஜயபாரதம் சார்பாக கலந்துரையாடுபவர் எம்.ஆர். ஜம்புநாதன்.

தங்களுக்கு இசையில் நாட்டம் ஏற்பட்டது எப்படி?

முதல் காரணம், என்னுடைய பெற்றோர்கள். இசையைக் கற்றவர்கள் மட்டுமல்ல, நல்ல ரசிகர்கள் கூட. அதனால் நான்கு வயது முதலே எனக்கு இயல்பாக பாட வந்தது.  அடுத்த சிறப்பான காரணம், சிறுவயதில் விடுமுறை  நாட்களில் திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் இருந்த தாத்தா வீட்டிற்கு செல்வேன். அப்பொழுது ஆறுகால பூஜைகளின் போது ஓதுவா மூர்த்தியின் வெண்கலக் குரலில் வந்தடைந்த திருமுறை. ஆகவே இசையின் பால் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு தாயுமானவரின் பிரசாதமே. நெய்வேலியில் இருந்த கீதப்பிரியா என்ற சபாவில் நடந்த எல்லா இசைக் கச்சேரிகளுக்கும் அழைத்துச் சென்று என் தாய் – தந்தையர் இசை ஆர்வத்தை வளர்த்தார்கள்.

பள்ளி நாடகளில் இசை பயில்வது கூடுதல் சுமையாக இருந்ததா?

நிச்சயமாக இல்லை. 8 வயதில் முறைப்படி கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஒன்று சொல்லட்டுமா? பத்தாவது பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் ரேங்க்.  மாவட்ட அளவிலும் முதல் ஐந்து இடத்திற்குள். வேடிக்கை என்னவென்றால், என்னுடைய நண்பன் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சொல்லிக்கொண்டு பள்ளிக்கு அழைத்துச் செல்வான். பின்னால் கேரியரில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டே வருவேன். கேள்வி ஞானம் தான் எனக்கு உடனே கிரகித்துக் கொள்ள வழி செய்தது. அந்த கேள்வி ஞானம் பெருக இசைபயின்றதே காரணம்.

அது மட்டுமல்ல, என் அம்மா பாட்டு  போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி என்று எது நடந்தாலும் என்னை ஊக்கப்படுத்தி பங்கேற்க செய்தார். பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவின் பல போட்டிகளில் கலந்து கொண்டு நான் வாங்கும் பரிசுகளை ஆசையாக சுமந்து வருவார்.

கல்லூரி நாட்களைப் பற்றி…

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவக் கல்லூரியில் இளங்கலை (இயற்பியல்) படித்தேன். அந்த சமயம் இயற்பியல், கணிதம், வேதியல் என்ற என் துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மைான பேராசிரியர்களும் இசையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமல்ல, முறைப்படி இசை கற்றவர்கள். கணிதத்துறை தலைமை பேராசிரியர் நாகராஜ ராவ் சென்னை வானொலி நிலைய ஏ கிரேடு கலைஞர். ஆக எப்பொழுதும் என்னை பாடச் சொல்லியும் அது தங்கள் உரையாடல்களில் என்னையும் கலந்து கொள்ளச் செய்தும் உற்சாகப்படுத்தினார்கள். இப்படி கல்லூரி நாட்கள் இனிமையான அனுபவமாக ஆனது.

உங்களை இசையில் வழிப்படுத்திய ஆசான்கள் யார்?

செம்பை வைத்தியநாத பாகவதரின் தங்கை மகன் அனந்தமணி பாகவதர்தான் என்னுடைய முதல் குரு. தேடி வந்து அருள் பாலித்த தெய்வம் என்று சொன்னால் அது மிகையல்ல. 8 வயதில் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, 6 மாதங்களில் மேடையேற்றினார். அதுமட்டுமல்ல, மேடையில் என் பின்னால் உட்கார்ந்து சுருதிப் பெட்டியில் சுருதி சேர்த்தார். முதுகில் தட்டிக்கொடுத்து பலே, சபாஷ் என்று ஒரு குழந்தையைப் போலே கை தட்டி மகிழ்ந்தார்.

பிறகு 1983 முதல் 1987 வரை மதுரை டி.என் சேஷகோபாலன் அவர்களிடம் குருகுல வாசம். அவர் குருகுலம் தொடங்கிய  முதல் ஆண்டின் முதல் மாணாக்கன் என்று என்னை ஒவ்வொரு மேடையிலும் பெருமிதத்துடன் குறிப்பிடுவார்.

இந்த இருவரைத் தவிர நீங்கள் நன்றியுடன் நினைப்பவர்கள் என்று சிலரைப்பற்றி..

அந்த பட்டியல் நீளமானது; இன்றும் தொடர்கிறது. குறிப்பாக அனைவருக்கும் தெரிந்த பிரபலஸ்தர்கள் என்றால் திருப்புகழ் குருஜி ராகவன், கிருபானந்த வாரியார், எம்பார் விஜயராகவாச்சாரியார், அருட்கவி சாதுராம் ஸ்வாமிகள், மன்னார்குடி ஈஸ்வரன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிலும், வாரியார் சுவாமிகள் கதா காலட்சேபத்தின்  இடையே ஒரு திருப்புகழையோ, தேவாரத்தையோ முதல் அடியைப்பாடி முடிக்கும் முன்பே ராகத்தை சொல்லி விடுவேன். அதற்காக அவர் கைநிறைய பழங்களை அள்ளிக் கொடுப்பார். அவர் பலமுறை இந்த தம்பி பிரகாசமாக வருவான் பாருங்க” என்று மனதார வாழ்த்தியிருக்கிறார்.

இசைத்துறையில் முழுநேரப்பணியாக ஏற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் ஆட்சேபிக்கவில்லையா?

கல்லூரி படிப்பு முடித்ததும் கீணிதூச்டூ உணஞூடிஞுடூஞீ ல் சென்னையில் பணியில் சேர்ந்தேன். பணி ஒன்றும் அதிகமாக இல்லாமல் ஊதியம் பெறுவதில் மனம் ஒப்பவில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்து ராஜினாமா செய்துவிட்டேன். உணஞூடிஞுடூஞீ இருந்து என் ஃபீல்டுக்கு (துறைக்கு) வந்துவிட்டேன் (சிரிப்பு).

என் பெற்றோர்கள் என் மனதைப் புரிந்து வைத்திருந்ததால் தடையேதும் தெரிவிக்கவில்லை.

யுனெஸ்கோ அமைப்பு உலகளாவில் கலாச்சாரத்தை பராமரிக்கும் நகரங்களுள் ஒன்றாக சென்னையை அங்கீகரித்துள்ளதை பற்றி…

ஏறத்தாழ நூறாண்டுகள் ஒரு தவம் போல இசையைப் போற்றிய கலைஞர்கள், வளர்த்த புரவலர்கள், சபாக்கள், ஊடகங்கள், அரசு, எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்கள் என்று எல்லோருடைய முயற்சிகளும்  நிறைவேறியிருக்கிறது. மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

‘சாஸ்திரிய சங்கீதம் நாதோபாசனை’ என்பது ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கி விடாமல் எல்லோரையும் சென்று அடைகிறதா?

சாஸ்திரிய சங்கீதம் என்பது அடிப்படையானது – வேர் போன்றது. அதன் பூ, காய், பழம் என்று எவர் எவருக்கு எந்த வடிவத்தில் சேர வேண்டுமோ அந்த அந்த வடிவங்களின் சென்று கொண்டு தான் இருக்கிறது. பரவலாக்குகிறேன் என்று சொல்லி பாரம்பரியத்தை நீர்த்துப் போகச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. வைரக் கடை வைரக் கடையாகத்தான் இருக்கவேண்டும். கவரிங் நகைக் கடையாக மாறிவிடலாகாது.

கர்நாடக இசையின் எதிர்காலம் நம்பிக்கை ஏற்படுத்தும் அளவில் இருக்கிறதா?

ஒளிமயமாகத் தான் எனக்கு தோன்றுகிறது. நிறைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள முன்வருகிறார்கள். கற்பிக்க ஆசான்களும் பலர் வருகின்றனர். நிறைய பேர் முழு நேர தொழிலாக ஏற்று நிறைவாக வாழவும் முடிகிறது. ரசிகர்களும் பெருகிக்கொண்டே வருகின்றனர். நாமெல்லாம் சாஸ்திரிய சங்கத்தின் வேருக்கு நீர்பாய்ச்சி வரும் வரை எதிர்காலம் நன்றாகவே இருக்கும்.

விஜயபாரதம் பத்திரிகையை படித்திருக்கிறீர்களா? ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு உண்டா?

பதில்: முன்பு 80-90 களில் படித்திருக்கிறேன். இப்பொழுதும் அவ்வப்பொழுது படிக்கிறேன். மேற்கு மாம்பலம் பகுதியில் வசிக்கும் போது எனக்கு ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுடன் பழக்கம் உண்டு. (சில மூத்த ஸ்வயம்சேவகர்கள் – கார்யகர்த்தர்கள் பெயர்களைக் குறிப்பிட்டார்). சென்னையில் ஒரு வருட ஆர்.எஸ்.எஸ். குருபூஜா பொதுவிழா மேடையில் பாடியிருக்கிறேன்.  சங்கத்தின் ஹிந்து ஒற்றுமை பணிகளுக்கு நான் ஆதரவாளன்.