கிராமத்திற்குப் போகும் பக்தி இசை : உபயம் ரவி

அவலூர் சக்ரவர்த்தி ரவி. இவர் சிறுவயது முதலே இசையில், குறிப்பாக பக்தி இசையில், நாட்டம் உள்ளவர். தேசப் பணிக்கு இசையின் மூலம் எப்படி உதவலாம் என்று  யோசித்தார். பள்ளி நாட்களில் இருந்தே இவர் சங்க ஸ்வயம்சேவக்.  விசுவ ஹிந்து பரிஷத்தின் கிருஷ்ண ஜெயந்தி விழா சரியான வாய்ப்பாயிற்று. பல ஆண்டுகள் தொடர்ந்து அம்பத்தூரை மையமாகக் கொண்டு திருவள்ளூர் வரை பல நகர்ப்புற, கிராமப்புற பள்ளி மாணவர்களைப் பங்கு கொள்ளச் செய்திருக்கிறார். (சில ஆண்டுகளில் 5,000 வரை மாணவர்கள் வரை தொடர்பில் வந்திருக்கின்றனர் என்று நினைவு கூர்கிறார்).

வயதானாலும் குடும்பப் பொறுப்புகள் கூடினாலும் இசைத் தொண்டு தொடர்கிறது. பதினைந்து ஆண்டுளாக ‘ஸ்வரபாரதி’ என்ற அமைப்பை  நடத்தி வருகிறார். (தொடர்புக்கு மின்னஞ்சல்: acravi1957@gmail.com) திருநின்றவூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் எட்டு இசைப் பயிற்சி பெற்ற ஆசிரிய – ஆசிரியைகள் மூலம் வாய்ப்பாட்டு கற்று தருகிறார். நான் சென்றிருந்த அன்று அணைக்கட்டுசேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு முதல் இளம்கலை இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் பன்னிரண்டு  சிறுவர் சிறுமிகள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு ஒரு மணி நேரம் நேர்த்தியான நிறைவான இசை நிகழ்ச்சி நடத்திக் காட்டினார்.

கடந்த ஐந்து வருடங்களாக இருபெரும் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

ஒன்று ஆடி மாதத்தில் அனைவருக்கும் இயன்ற ஒரு வார இறுதியில் தன்னுடைய  மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று சுமார் 300 பேர்வரை அழைத்துச் சென்று திருவையாற்றில் தியாகராஜருக்கு குருபூஜை வந்தனம் செய்கிறார். சமர்ப்பண மனோபாவம் வளர்ந்தால் இசையில் ஈடுபாடு கூடும், மனதில் கர்வம்போகும் என்கிறார்.

இரண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் ஆண்டாள் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், வினாடி வினா நடத்துகிறார். 500 முதல்,  1,000 பேர் வரை பங்கு கொள்கிறார்கள். தன் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் பார்ப்பவர்களின்  இசை ஆர்வம் பெருகவும் உதவுகிறது என்கிறார். வாழ்த்துவோமே!