சமய சொற்பொழிவில் பாரத் மாதா கீ ஜெய்!

மத்திய சென்னையில் வசதி படைத்த மக்கள் வாழும் பகுதியில் ஓர் ஐயப்பன் கோயில். அங்கு ஒரு வாரம் ஆன்மீக தொடர் சொற்பொழிவு ஏற்பாடாகியிருந்தது. அன்று தொடக்க நாள். உபன்யாசகர் தொடங்குவதற்கு முன்னர் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம் என்கிறார். எதற்காக பிரார்த்தனை என்று பாருங்கள்!

* ‘‘நம் நாடு ஹிந்துஸ்தானமாக திகழ”

* ‘‘இனி ஒரு முறை ஒரு தீவிரவாதி கூட நம் நாட்டிற்குள் நுழைய கூடாது- அந்த துணிச்சலே ஒரு தீயவனுக்கும் தோன்றக் கூடாது.”

* ‘‘நம் எல்லைச்சாமிகளான ராணுவ சகோதரர் களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்க.”

* ‘‘நாட்டின் நலனுக்கு சுபிட்சமான எதிர் காலத்திற்கு”

என்று சொல்லி அவர் ஆரம்பித்து வைக்க அனைவரும் அவருடன் பிரார்த்தனையில் ஆர்வத்துடன்  இணைந்து கொள்கிறார்கள். முடிவில் “ஜெய் ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ” என்று முழங்கினார்கள்.

அந்த ஆன்மீக சொற்பொழிவாளர் பெயர் குருஜி கோபாலவல்லிதாசர். 1975ம் ஆண்டு சென்னையில் பிறந்து, பள்ளி மற்றும் பாலி டெக்னிக் படிப்புகளையும் முடித்துவிட்டு ஓராண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு தன்னுடைய 19, -20 வயதிலேயே இறை பணியில் ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். ‘‘ஜாதி சம்பிரதாயங்களைப் பாரோம் உயர் ஜென்மம் இத்தேசத்தாவராயின்” என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாய் சொல்கிறார்.

தன் மேடை பிரசங்கங்கள், தொலைக்காட்சி உரைகள், வாட்ஸப் செய்திகள் மூலமாகவும் நாட்டில் ஜாதி வெறுப்பு மறைய, மதமாற்றம் தடுத்து நிறுத்தப்பட, தாய் மதம் திரும்ப நினைப்போருக்கு ஏற்ற  ஆக்கப்பூர்வமான சூழ்நிலை அமைய, ஆண்டாளை, கிருஷ்ணனை இழித்துபேசும் நாத்திகர்களின் கொட்டம் அடங்க, வலிமையான வளமான பாரதமாக உலகில் உரிய கெளரவம் பெற பிரதமர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும் அதற்கு பாஜக விற்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என்று தன் அன்பர்களுக்கும்  நட்பு வட்டத்தினர்க்கும் பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார்.