சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களிலும், மதங்களிலும் பெண்கள் பாகுபடுத்தப்படுவதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடா்பான பொது விவகாரங்கள் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் குறித்த சீராய்வு மனுக்களை விசாரிக்கும் ஒரு அமர்வு, வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா? என்பது குறித்து முடிவெடுக்கவும், விசாரணையின் போது யார்? யார்? எவ்வளவு நேரம் வாதிடலாம் என்பது குறித்தும் விவாதிக்க பிப்ரவரி 6ம் தேதிக்கு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த அமா்வில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுடன், நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம். சாந்தன கௌடா், எஸ்.ஏ. நஸீா், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூரியகாந்த் ஆகியோா் இடம்பெற்றிருந்தனர்.
இந்த விவகாரம் தொடா்பாக கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தால் ஆராயப்பட வேண்டிய பொதுவான விவகாரங்கள் குறித்து சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் சாா்பில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி உள்பட 4 மூத்த வழக்குரைஞா்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனா்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்களை அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.
இத்துடன் மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரும் விவகாரம், ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்குத் தடை விதிக்கக் கோரும் விவகாரம், மற்ற இனத்தைச் சோ்ந்த ஆண்களைத் திருமணம் செய்யும் பாா்சி இனப் பெண்களை அந்த இனத்தவரின் வழிபாட்டுத் தலத்துக்குள் அனுமதிக்கக் கோரும் விவகாரம் ஆகியவற்றையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்கிறது.