திருமலையில் வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்து சனாதன தார்மீக கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 57 பீடாதிபதி கள் வருகை தர உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மாபெரும் இந்து சமய சனாதன தார்மீக கருத்தரங்கு நடைபெற உள்ளது. ஆஸ்தான மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகளை நேற்று நேரில் ஆய்வு செய்த திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி கூறியதாவது.
திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் திருமலையில் வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்து சனாதன தார்மீக கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவதாக இதுவரை நாடு முழுவதிலும் இருந்து 57 பீடாதிபதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். குக்கிராமங்கள், கிராமங்களில் என்றும் மத மாற்றம் என்பது நடைபெறாமல் இருக்க திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து பிரச்சார பரிஷத் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட ஊர்களில் இந்து கோயில்களை கட்டுவது, இந்து தர்மத்தை போதிப்பது, நமது கலாசாரத்தின் பெருமைகளை எடுத்துக் கூறுவது உள்ளிட்ட பல பணிகளை செய்து வருகிறது.
குறிப்பாக இந்து சமயத்தின் மீதும், நமது இந்து கலாச்சாரம் மீதும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது மிக முக்கியமாகும். 57 பீடாதிபதிகள் மட்டுமல்லாது. பல்வேறு ஜீயர்கள். மடாதிபதிகளும் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள திருப்பதி விஜயம் செய்கின்றனர். இந்த கருத்தரங்கில் பல கருத்துக்கள் பரிமாறப்படும். பல ஆலோசனைகள் முன் வைக்கப்பட உள்ளன என்று அறங்காவலர் கருணாகர் ரெட்டி கூறினார்.