சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச தொழிலாளர்கள்

 பெருந்துறை சிப்காட் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள், சட்டவிரோதமாக வசிப்பதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பகுதியில் அசாம், பீஹார், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.இந்நிலையில், உரிய ஆவணம், அனுமதியின்றி சிப்காட் பகுதியில் வசித்து வந்த, வங்கதேச வாலிபர்கள், நான்கு பேரை, பிப்., 18ல் போலீசார் கைது செய்தனர். நான்கு பேரும், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் கூறியதாவது: பெருந்துறை சிப்காட் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவணங்கள் இன்றி, தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். சிலர் பணம் செலவழித்து, போலியாக ஆதார் கார்டுகளை தயார் செய்து, ஆதாரமாக காட்டி வருகின்றனர்.போலீசார் முறையாக கணக்கெடுப்பு நடத்தினால், வங்கதேச நாட்டவர் பலர் சிக்குவர். போலீஸ் பற்றாக்குறையால், இதுபோன்ற கணக்கெடுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.நிறுவன உரிமையாளர்களும், தொழிலாளர்கள் பற்றாக்குறையால், முறையாக விசாரித்து, ஆட்களை சேர்ப்பதில்லை.

திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில், நுாற்றுக்கணக்கான வங்கதேசத்தினர் குடியிருந்து வருகின்றனர். பெருந்துறை சிப்காட் பகுதியில் குடியிருந்து வரும் வங்கதேசத்தினரை கண்டறிந்து வெளியேற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.