மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ., – எம்.பி.,க்கள் 12 பேரில், 10 பேர் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். தெலுங்கானா, ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் மற்றும் வட கிழக்கு மாநிலமான மிசோரமில், சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகின.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,க்கள் ராஜ்யவர்தன் ரத்தோர், கிரோடி லால் மீனா, தியா குமாரி, பாபா பாலக்நாத் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ம.பி.,யில், எம்.பி.,க்கள் நரேந்திர தோமர், பிரஹலாத் படேல், ரித்தி பதக், ராகேஷ் சிங், உதய் பிரதாப் சிங் ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றுள்ளனர். இதே போல், சத்தீஸ்கரில் நடந்த தேர்தலில், ரேணுகா சிங், அருண் சாவோ, கோமதி சாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அரசியலமைப்பு சட்டப்படி, ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால், இந்த 12 எம்.பி.,க்களில், 10 பேர் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இவர்கள், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தலைமையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
அதன்படி, ராஜ்யவர்தன் ரத்தோர், கிரோடி லால் மீனா, தியா குமாரி, நரேந்திர தோமர், பிரஹலாத் படேல், ரித்தி பதக், ராகேஷ் சிங், உதய் பிரதாப் சிங், அருண் சாவோ, கோமதி சாய் ஆகியோர், எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.
இவர்களில் சிலர், மத்திய அமைச்சர்களாகவும், இணை அமைச்சர்களாகவும் பதவி வகித்து உள்ளனர். இதனால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாபா பாலக்நாத், ரேணுகா சிங் ஆகியோர் எம்.பி., பதவியை ராஜினாமா செய்யவில்லை. விரைவில் இவர்களும் ராஜினாமா செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.