சங்கம் வாழ்ந்திட நீர் புதைந்தீர் தமிழகத்தில் சங்கப்பணிக்கு வித்திட்ட தாதாராவ் பரமார்த்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொட்டு சங்க வேலையில் முழுநேரமும் ஈடுபடும் பாக்கியம் பெற்ற சிலரில் ஒருவர் தாதாராவ் பரமார்த். மெலிந்த உடலில் சட்டை, கோட் அணிந்து கொண்டு நாள் முழுதும் சுறுசுறுப்புடன் சுற்றித் திரிந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சங்கத்தின்பால் ஈர்த்து அவர்களுடைய பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் பாத்திரமான தாதாஜி, சங்க ஸ்தாபகர் டாக்டர் ஹெட் கவாரைச் சந்தித்ததே ஒரு விசித்திரமான முறையில் தான்.
அனல் எழுப்பிய கேள்வி : 1920 ஆகஸ்டு 1-ம் தேதியன்று லோகமான்ய பாலகங்காதர திலகர் காலமான செய்தி நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவியது. நாகபுரியில் டாக்டர் ஹெட்கேவார், பெரும் தேசபக்தர் டாக்டர் மூஞ்சேவை சந்திக்கச் செல்லும் போது வழியில் இளைஞர் கூட்டமொன்று ‘கிரிக்கெட்’ விளையாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் “லோகமான்ய திலகர் காலமாகிவிட்டதாக செய்தி வந்திருக்கிறது. நீங்களென்ன வென்றால் எதைப்பற்றியும் கவலைப்படாது இங்கு விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே!’” என்று கேட்க டாக்டர்ஜியின் அந்த சொற்கள், இளைஞர்களில் ஒருவனுடைய உள்ளத்தில் அம்புபோல் பாய்ந்தது.
அந்த சம்பவம் அவனுடைய வாழ்க்கை யையே அடியோடு மாற்றியது. அந்த நாள் முதல் டாக்டர் ஹெட்கேவாரின் நெருங்கிய நண்பனாக மாறிய அந்த இளைஞன் வாழ்நாள் முழுதும் டாக்டர்ஜி காட்டிய பாதையில் சங்கப்பணி செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு விட்டான். அந்த இளைஞன்தான் தாதாராவ் பரமார்த்.
புதிய புதிய இடங்களில் சங்கக் கிளைகள் துவங்குவதற்கு முன்னோடியாக அவர் செல் வார். ெடல்லி, சென்னை மற்றும் மகாராஷ்டிரத் தின் பல்வேறு பகுதிகளில் சங்க வேலைக்கு வித்திட்டவர் அவரே. ஸ்ரீ தாதாராவ் அடிக்கடி ஒரு வாக்கியம் கூறுவதுண்டு: நாகபுரியிலிருந்து செல்லும்பொழுது சங்கத்தை உடன்கொண்டு செல்லுங்கள். திரும்பி வரும்பொழுது அதை அங்கேயே விட்டுவிட்டு வாருங்கள்.
ஆழத்தில் ஆன்மீகம் : ஸ்ரீ தாதாஜிக்கு ஞானேச்ரி, தாஸபோதம் மற்றும் பல அத்யாத்ம நூல்களில் ஆழ்ந்த பாண்டித்யம் இருந்தது. அவருடைய சொற்பொழிவுகளில் ஆங்கிலச் சொற்களுடன் ஞானேச்வரியின் ‘அபங்கங்கள்’ (செய்யுள்கள்) தேனாக ஒழுகிவரும்.
சுதந்திரப் போராட்டகாலம் முடிந்து நாடு விடுதலை யடைந்தபின் அவருடைய சிந்தனை அத்யாத்மிக விஷயங்களில் திரும்பிற்று. சில காலம் அவர் புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ”இந்த புராதனமான பாரத தேசம் ஒரு பெரிய லட்சியத்தை அடைய இருக்கிறது” என்றவர் அடிக்கடி கூறுவார். அவரது வாழ்க்கையில் நடந்த மேலும் சில சுவையான சம்பவங்கள் அவருடைய சிறப்புக் களை எடுத்து கூறுகின்றன.
சம்பவங்கள் சித்தரிக்கும் தாதாஜி : நாகபுரியிலிருந்து ஒரு பிரசாரக் சென்னைக்கு வந்தார். அவர் கொச்சிக்கு பிரசாரகராக போக வேண்டும், என்று மா. தாதாஜி சொன்னார். அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று அப்பிரசாரக் கேட்கும்பொழுது மா. தாதாஜி சொன்ன பதில் மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. அவர் சொன்னார். One who knows what to do, knows how to do it.’ ‘என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தவருக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியும். “For Shaka attendance there is no season no reason Dadaji.
அப்பொழுது பெரியவர்களுக்காக வருடா வருடம் ஒரு மூன்று நாட்கள் முகாம் நடக்கும். அந்த முகாமில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெரியவர் கேட்டார். Can I ask any question ?” உடனே தாதாஜி பதில். ‘Yes, you are free to ask but I am not bound to reply?”
சென்னையில் கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் நல்ல ஷாகா இருந்தது. அந்த சமயத்தில் ஆந்திராவில் இன்ஜினீயரிங் கல்லூரி இல்லை. ஆகவே அங்கிருந்து மாணவர்கள் சென்னைக்கு வருவார்கள். கிண்டி ஷாகாவில் அதிகமான ஸ்வயம்சேவகர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள். ஒரு நாள் மைலாப்பூரில் சங்க காரியாலயத்திற்கு கிண்டி ஷாகாவிலிந்து 3 பேர் வந்தார்கள். அவர்கள் தீவிரமான சங்க எண்ணம் உள்ளவர்கள். அவர்களுக்கு நாட்டு நிலைமையையும் சங்கத்தின் அவசியத்தையும் பார்த்து ஒரு யோசனை வந்தது. படிப்பை விட்டுவிட்டு உடனடியாக பிரசாரகராக மாற வேண்டும் என்று தான் அந்த யோசனை. தாதாஜி அப்பொழுது சென்னையில் இல்லை. சுற்றுப்பயணத்தில் இருந்தார். இந்த கிண்டி கோஷ்டி மிகவும் துடித்துகொண்டே இருந்தது. தாதாஜி எந்த ஊரில் இருப்பார், அந்த ஊரில் போய் சந்திக்க வேண்டும் என்று கூட அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது சரியில்லை என்று சொல்லப்பட்டது. பிறகு மா. தாதாஜி சென்னைக்கு வந்த பிறகு இந்த கோஷ்டி அவரை சந்தித்தது. தாதாஜி கேட்டார். “இந்த முடிவை யார் செய்தது?” “நாங்கள் மூன்று பேர் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம்.” அப்பொழுது தாதாஜி சொன்னார். “நீங்கள் சங்க வேலைக்காக போக வேண்டாம். படிப்பை முடித்து கொள்ளுங்கள்” என்றதும், அந்த இளைஞர்களுக்கு இந்த பதில் பெருத்த அதிர்ச்சி கொடுத்தது. காரணம் தாதாஜியின் ஒவ்வொரு சொல்லும் வாலிபர்களுக்கு தியாகம் செய்ய தூண்டிவிடும் அப்படி இருக்க தாதாஜி ஏன் நம்முடைய யோசனையை ஏற்கவில்லை?
அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். அந்த காலத்தில் ஆந்திராவில் சிறு வயதில் திருமணம் நடக்கும். தாதாஜி சொன்னார் “வாழ்க்கையைப்பற்றின முடிவுகள் எப்பொழுதும் தனிபட்ட முறையில் செய்ய வேண்டும். கூட்டாக இல்லை.” அவருடைய சொற்களில் எத்தனையோ அனுபவங்களின் சாரம் அடங்கியிருந்தது.
தாதாஜீயிடம் வளவளா பேச்சுக்கு எப்பொழுதும் இடம் இல்லை. அவருடைய வெளித் தோற்றம் பார்த்தால் எவருக்கும் உயர்ந்த அபிப்பிராயம் வராது. ஆனால் பழக ஆரம்பித்தால் மிக பெரியவர்களும் அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். உதாரணம்- ஸ்ரீ டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி. அவர் சுமார் 72 வயதுள்ளவர். ஒருகாலத்தில் அட்வகேட் ஜெனரல் பொறுப்பில் இருந்தவர். 1948-ல் சங்கம் தடைசெய்யப்பட்ட காலத்தில் ஸ்ரீ டி.ஆர்.வி.சாஸ்திரிதான் சங்கத்திற்கும், அரசாங்கத்திற்கும் மத்தியஸ்தராக இருந்தார். மானனீய தாதாஜீயைப் பற்றி சாஸ்திரியாருக்கு மிக நல்ல அபிப்பிராயம்.
தாதாஜீ அந்த சமயம் திருவல்லிக்கேணியில் உள்ள அக்பர் சாஹிப் தெருவில் ஒரு வீட்டின் மாடியில் தங்கியிருந்தார். ஸ்ரீ சாஸ்திரி காரில் அங்கு வந்து தெருவிலிருந்து கொண்டே ‘பரமார்த், பரமார்த்’ என்று அழைப்பார். அவ்வளவு நட்பு!
அவரது செயல்முறை : தாதாஜீ வேலை செய்யும்முறை அலாதியானது. அவருக்கு Spoon-feeding ‘கட்டு சாத முறை’ பிடிக்காது. சென்னையில் மாநில அளவில் கூட்டம் (பிராந்த பைட்டக்) ஏதாவது அல்லது நிகழ்ச்சி இருந்தால் அவர் மாநகர் கார்யவாஹ் எத்திராஜ்ஜீயிடம் அந்த நிகழ்ச்சி, தேதி, எத்தனை பேர் வருவார்கள் என்று சொல்லுவார். அவ்வளவு தான். இது சொன்னால் போதும் எத்திராஜ்ஜீ எல்லா ஏற்பாடுகளும் செய்வார் என்று அவருக்கு முழு நம்பிக்கை. எத்திராஜ்ஜீ அவர்களும் அதற்குத்தக முழு பொறுப்புடன் எல்லா ஏற்பாடுகளையும் செய்வார். இதுதான் தாதாஜீயின் ஸ்டைல்.
அகத்தில் புரட்சி மிளிரட்டும் : அந்நியனை இந்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, நாம் அனைவரும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ராஷ்ட்ர எண்ணம் ஒவ்வொருவருடைய மனதிலும் ஏற்பட்டால்தான், இந்த நாட்டிற்கு விமோசனம் ஏற்படும் என்று டாக்டர் ஹேட்கேவார் கண்டார். ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் புரட்சி எண்ணங்களுக்குப் பதிலாக தேசிய – ராஷ்ட்ர – குணங்கள் குடிகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார்.
டாக்டர்ஜீ தாம் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தமது நெடுங்கால நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது. அவருடன் வங்காளி மொழியில் பேசினார். அப்போது, ”வெகுவிரைவில் வங்காளத்திற்கு ஒருமுறை வரவேண்டுமென்று இருக்கிறேன். வெளியே புரட்சி செய்வதைவிட, ஒவ்வொரு மனித உள்ளத்திலும் ராஷ்ட்ர எண்ண மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கூறவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.
(விஜயபாரதம் ௧.10.1௯௭௯ விஜயதசமி மலரிலிருந்து)