அன்புடையீர், வணக்கம்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன். லோகநாதன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயபாரதம் வாசகர். சமீபத்தில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரே வாரத்தில் குணமாகி வீடு திரும்பினார். அவரது உடல்நிலை பற்றி கேள்விபட்ட நமது ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்கள். அப்போது அவர், நான் புதியதாக ஐந்து பேர்களிடம் ‘விஜயபாரதம்’ பற்றி பேசியுள்ளேன். அவர்களும் சந்தா தர சம்மதித்துள்ளார்கள். இந்த வாரம் நான் வாங்கி விடுவேன். தயவுசெய்து நீங்கள் யாராவது வந்து அதனைப் பெற்று விஜயபாரதத்திற்கு அனுப்ப வேண்டுகிறேன்” என்று வந்தவர்களிடம் தெரிவித்தார்.
அவர் சொன்னபடியே ஐந்து பேர்களிடம் தொலைபேசியில் பேசி, சந்தா தொகை பெற்று நமது சங்க அன்பர் மூலம் சென்னைக்கு அனுப்பி விட்டார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிற ஒரு அன்பர், விஜயபாரதத்திற்கு சந்தா சேகரிப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்திருக்கிறார்! இந்த விஷயத்தை அன்பர் கிருஷ்ணமூர்த்தி மூலம் தெரிந்து கொண்டபோது நான் நெகிழ்ந்து போனேன். லோகநாதன் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
வாழி நலம் சூழ.
ம. வீரபாகு, ஆசிரியர்