சங்கப் பணியுடன் சமூகப் பணியும் செய்த குமாரசாமி ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, குமாரசாமி ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

சங்கரன்கோவிலில், 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி சங்கரலிங்கம் – சங்கரம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், குமாரசாமி ஜி. அவருடன் பிறந்தவர் ஒரு தம்பி. நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியை சங்கரன்கோவில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்தார், பின்பு பி.யூ.சி படித்தார்.
சங்கத்தின் மூத்த அதிகாரிகளின் மூலம் சங்கத்தொடர்பு ஏற்பட்டது.

சங்கப் பாடல்களை நல்ல ராகமுடன், சிறந்த குரல் வளத்தோடு பாடுவதில் திறமையானவர். முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1970 ஆம் ஆண்டு மதுரையிலும், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1973 ஆம் ஆண்டு கோயம்புத்தூரிலும் முடித்தார்.

சங்கத்தின் மீது கொண்ட அதீத ஈடுபாடால், சங்கப் பிரச்சாரக்காக 1970 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் சங்கப் பிரச்சாரக்காக இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் தான், அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் அடாவடி நடவடிக்கையால், நமது நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அதனை எதிர்த்து, பல்வேறு வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த களப்பணி செய்தார்.

1976 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி, சத்தியாகிரகப் போராட்டத்தின் போது, “வந்தே மாதரம் பாரத் மாதா கீ ஜெய்”, “ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கு” “அவசரநிலை பிரகடனத்தை நீக்கு” என பலத்த கோஷமிட்டார், குமாரசாமி ஜி.

இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற காவல்துறையினர், அவரை மவுண்ட் ரோடு போஸ்ட் ஆபீஸில் இருந்து, ஜுப்பில் அழைத்துச் சென்று தலை, காது, கை, முதுகு என எல்லா உடல் உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் பலமாக தாக்கியது.

கோபத்தின் எல்லைக்குச் சென்ற காவல்துறையினர் “இவனை தூக்கி குப்பையில் போடு” என ஆக்ரோஷத்துடன் கூறியது. அவர்கள் அடித்த அடியில் பல நாட்கள் காது கேட்காமலும், ரத்த சிவப்பு கண்கள், வலி, வேதனைகளுடன் உயிர் வாழ்ந்தார். அந்த நிலையிலும், அவரது உடல் நலம் தான் பாதிக்கப்பட்டதே தவிர, மனது போராடும் குணத்திலேயே இருந்தது.

உள்நாட்டு உற்பத்தியான கதர் மாலைகளை எடுத்து குப்பை கிடங்கில் உள்ள நெருப்பில் போட்டனர், போலீசார். அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார், குமாரசாமி ஜி. “கதர் மாலை” என்பது தேசிய சுதேசி சின்னம். அதனை தீயிலிட்டு எரிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

1976, டிசம்பர் 5 முதல் 1977, ஜனவரி 8 வரை என தொடர்ந்து 35 நாட்களாக, ஜெயில் கைதி உடையுடன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்தபோதும் மனம் தளராமல், மீண்டும் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1977, ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, சென்னை கடற்கரை நகர் கூட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் சிறை சென்றார்.
ஏப்ரல் 2 அன்று விடுதலை ஆனார்.

நெருக்கடி நிலையை எதிர்த்து, போராட்டம் செய்ததால், முதல் முறை 35 நாட்களும், இரண்டாவது முறை 66 நாட்களும் என 101 நாட்கள் மத்திய சிறையில் கழித்தார்.

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், சமூகப் பணியில் தனது வாழ்க்கையை செலுத்த விரும்பினார். காஞ்சி சங்கர மடத்தில் முழு நேரமாக சமுதாயப் பணி செய்யும் வேலைகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்து சமய பயிற்சி வகுப்புகளை நடத்துவது, சங்கத்தின் தேசபக்திப் பாடல்களை, அடுத்த தலைமுறையினருக்கு பயிற்சி கொடுப்பது, கோயில் சரியான முறையில் பராமரிக்கப்படாத ஊரில், மக்களை திரட்டி விளக்குப் பூஜைகள் நடத்துவது, அதன் மூலம் ஹிந்து எழுச்சி ஏற்படுத்துவது, மதமாற்றம் தடுக்கப்படுவது என சமுதாயப் பணியுடன், சமயப் பணியையும் திறம்பட செய்தார்.

நூறுக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த காரணமாக இருந்தது, தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என பெருமைப்படக் கூறுகிறார்.

கோயிலுக்கு வரும் இளம் குழந்தைகளுக்கு, சமய நீதி போதனை வகுப்புகள் நடத்தி, அதன் மூலம் அவர்களின் குடும்பத்தில், நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வந்தார். சமயச் சொற்பொழிவுகள், யோகா வகுப்புகள், தேவாரம், திருவாசகம், சங்கப் பாடல்கள் போன்றவற்றை தொடர்ந்து குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

தனது வாழ்நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருவிளக்கு பூஜைகள் நடக்க காரணமாக இருந்தது, தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் எனக்கூறி புளகாங்கிதம் அடைகிறார்.

வயது முதிர்ந்த நிலையிலும், உடல் நலிவுற்ற நிலையிலும், தனக்கு கிடைத்த வளம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன், அடுத்த தலைமுறையினருக்கு சங்கப்பாடல் பயிற்சியினை கொடுத்து வந்தார், குமாரசாமி ஜி.

1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி நளினி அம்மாளை திருமணம் செய்த குமாரசாமி ஜிக்கு, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சங்கத்தின் மூத்த அதிகாரிகளான சூரி ஜி, இராம கோபாலன் ஜி, சுப்பாராவ் ஜி, இல கணேசன் ஜி மற்றும் ஷேத்ர, பிராந்த அதிகாரிகள் பலர் இவரது வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். பல வருடங்கள் சங்கத்தின் பயிற்சி முகாம்களில் சிக்ஷக்காகவும், பிரபந்தக்காகவும் இருந்துள்ளார்.

சங்கப் பாடல்களை ராகத்துடன் எப்படி பாட வேண்டும் என பல ஸ்வயம்சேவகர்களுக்கு பயிற்றுவித்துள்ளார். தற்போது சென்னை வியாசர்பாடியில் வசித்து வருகிறார்.

முதலில் சங்கப் பணி, பின்பு காஞ்சி மடத்தின் மூலமாக சமுதாயப் பணி செய்து வந்த குமாரசாமி ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார். 