சென்னை தெருக்களை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற, கோவையில் இருந்து 41 எச்.பி., திறன் கொண்ட மோட்டார்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. மோட்டார் பம்ப் செட்களின் உற்பத்தி கேந்திரமான கோவையில் இருந்து ராட்சத மோட்டார்கள், மாநகராட்சி சார்பில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் நிறுவனங்களிடம் இருந்து முதற்கட்ட மாக நேற்று, 41 எச்.பி., திறன் கொண்ட ஆறு ராட்சத மோட்டார்கள், 10 சிறு மோட்டார்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், கூடுதல் மோட்டார்கள் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த ராட்சத மோட்டார்கள், 32 கிலோ வாட் திறனுடன் வேகமாக தண்ணீரை வெளியேற்றும் திறன் உடையவை. இந்த ஆறு மோட்டார்கள், ஏற்றுமதிக்காக தயாராக இருந்த நிலையில், மாநகராட்சி கமிஷனரின் நடவடிக்கையால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதேபோல, கன மழையால் சிக்கி தவிக்கும் சென்னை மக்களுக்கு உதவும் வகையில், என்.எல்.சி.,யில் இருந்து மிதக்கும் ராட்சத மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த மோட்டார்கள், ஒரு நிமிடத்தில், 1 லட்சம் லிட்டர் மழை நீரை வெளியேற்றும் திறன் கொண்டவை. மேலும், இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்