காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள் மற்றும் கட்டடங்கள் அனுபவித்து வருவோர், அதற்கான வாடகையை, கோவில் நிர்வாகத்திற்கு முறையாக செலுத்தவில்லை. இதனால், கோவிலுக்கு தரவேண்டிய வாடகை பாக்கி 48.03 கோடி ரூபாய் நிலுவை வைத்திருப்பதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாடகை பாக்கி வைத்துள்ளோரின் பெயரை, பேனரில் அச்சிட்டு, ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, கோவில் செயல் அலுவலர் முருகேசன் கூறியதாவது:கோவில் பதிவேட்டில் உள்ளபடி, நிலங்களை அனுபவித்து வருவோர், செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை மட்டும் வெளியிட்டுஉள்ளோம். அரசு மதிப்பின்படி, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளன.
கோவிலை சுற்றியுள்ள மாடவீதி மற்றும் காஞ்சிபுரம் நகரில் உள்ள கடைகளுக்கு, வாடகை பாக்கி செலுத்த வேண்டியவர்களும் உள்ளனர். அவர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறோம். இன்னும் சில நாட்களில், அதன் விபரம் குறித்து, அறிவிப்பு பதாகை வைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். ஏகாம்பரநாதர் கோவில் மாட வீதியை சுற்றிலும், 170 வீடுகள் உள்ளன. வீடுகளில் வசிப்போர், ‘வசிப்பிடம் எங்களுக்கு சொந்தம்’ என, 2010ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, 2018ல் முடிந்தது. ‘கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை, யாரும் உரிமை கொண்டாட முடியாது’ என, அதிரடியாக, நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.