”ஹிந்து விரோத அரசாக காட்ட, சில அதிகாரிகள் செய்யும் முயற்சிகளுக்கு, அ.தி.மு.க., அரசு பலியாக வேண்டாம்,” என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.
அவர் அளித்த பேட்டி: கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு, பட்டா வழங்குவதை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தமிழக அரசு, ‘4.78 லட்சம் ஏக்கர் நிலத்தில், 600 ஏக்கர் மட்டும் வாங்குகிறோம்’ என, பதில் அளித்துள்ளது.கோவில் நிலங்கள், அரசு நிலங்கள் அல்ல; தனி நபர்கள், கோவில் வளர்ச்சிக்காக எழுதி வைத்த, அறக்கட்டளை சொத்து. இதில், கை வைப்பது, கோவில் நடவடிக்கை மற்றும் மத நம்பிக்கையில் குறுக்கிடுவதாகும்; இதை அனுமதிக்க முடியாது.
வெறும், 600 ஏக்கர் தான் தேவை என்றால், புறம்போக்கு நிலத்தில் வழங்கலாம். கோவில் நிலங்களை பாதுகாக்க, அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்; அவர்கள், நிலங்களை பாதுகாக்க வில்லை. கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த மனு போட்டு, ஏராளமானோர் காத்திருக்கின்றனர். 2015ல் கொடுத்த மனுவுக்கு, இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் அடுத்த, பாப்பான்சத்திரம் கிராமத்தில் உள்ள, காசி விஸ்வநாதர் கோவிலிலுக்கு சொந்தமான நிலத்தில், பொழுதுபோக்கு பூங்கா, தனியார் பள்ளி உள்ளது; அவற்றை அப்புறப்படுத்தவில்லை.
ஹிந்து கோவில்களை பாதுகாக்க முடியாத துறை எதற்கு?கோவில் நில ஆக்கிரமிப்பாளர் களுக்கு, பட்டா கொடுப்பது, ஹிந்து மத நடவடிக்கைகளை முடக்கும் செயல. அ.தி.மு.க., அரசை, ஹிந்து விரோத அரசாக காண்பிக்க, சில அதிகாரிகள் செய்யும் முயற்சிக்கு, தமிழக அரசு பலியாக வேண்டாம். இவ்வாறு, ராஜா கூறினார்.