கோவில் நிலத்தில் தனியார் பள்ளி மாற்று இடம் அடையாளம் காண உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ., ஆன்மிக பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த மனு:

கடலுார் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோவில் உள்ளது. கூத்தம்பாக்கம் கிராமத்தில், இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளன. புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு, கோவில் நிலம் ஒதுக்கப்பட்டது. பின், அந்த ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், புவனகிரி அல்லது பள்ளிக்கு அருகில் மாற்று நிலம் ஒதுக்கும்படி, வருவாய் துறைக்கு, 2019ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தி, கோவில் வசம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கோவிலுக்கு தான் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மதிப்புடைய நிலம், தனியார் பள்ளி வசம் உள்ளது. கோவிலின் மற்றொரு நிலமும் பள்ளி வசம் உள்ளது. அதில், கட்டுமானமும் எழுப்பப்பட்டுள்ளது. கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, நிலங்களை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் என்.சுரேஷ் ஆஜரானார்.

அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”பள்ளிக்கு மாற்று இடம் வழங்கவும், அதன்பின், பள்ளி வசம் உள்ள நிலத்தை எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,” என்றார். அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், ”பள்ளிக்கு மாற்று நிலம் ஒதுக்குவதற்கான திட்டம் அரசிடம் நிலுவையில் உள்ளது,” என்றார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, ஐந்து ஆண்டுகள் ஆகியும், அரசு வசம் திட்டம் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆறு மாதங்களில் இடத்தை அடையாளம் காண வேண்டும். இதர நிலங்களை பொறுத்தவரை, 3 மாதங்களில் சர்வே நடத்தி, அதில் ஆக்கிரமிப்பு இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறப்பு பிளீடர் தெரிவித்துள்ளார். இவ்வாறு முதல் பெஞ்ச் பிறப்பித்துள்ளது.