தமிழகத்தில், பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தார், கடையர், காலாடி, குடும்பர், பள்ளர், பண்ணாடி ஆகிய ஜாதிகளை இணைத்து, தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே விதமான பொதுப் பெயரிடக்கோரி அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன. அதை பரிசீலிக்க கடந்தாண்டில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையை ஏற்று அந்த ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இனி தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப்பெயர் இடப்படும். அதேநேரம், சமூக பொருளாதார நிலை கருதி பட்டியலின வகுப்பில் தொடர்வார்கள். இதற்கான மத்திய அரசின் ஆணையை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.