கோப்பை வென்ற குடும்பம்

சமீபத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு என்றால் கிரிக்கெட்டில் பாரதப் பெண்கள் வென்ற உலகக்கோப்பை தான். இந்த இடத்தை அடைய அவர்கள் ஒவ்வொருவரும் கடந்து வந்த பாதை உலகக் கோப்பை போட்டியை விட சவாலானது!
ஒவ்வொரு வீராங்கனையின் போராட்டம், வலியும், சுவாரசியமும் நிறைந்தது.

ஆல் ரவுண்டர் அமன்ஜோத் கௌர் :-
இவரது அப்பா தச்சரானதால் உதிரி மரத்துண்டுகளைக் கொண்டு தன் கையாலேயே மட்டை தயாரித்துத் தந்து மகளை விளையாட ஊக்குவித்தார்.

பேட்ஸ்மேன் ஷெஃபாலி வர்மா – நகை தொழிலாளியின் மகள்:
பள்ளி கிரிக்கெட் டீமில் இருந்த அண்ணனுக்கு உடல் நலமில்லாததால் அண்ணனுக்கு பதிலாக விளையாட அண்ணனைப் போலவே முடி வெட்டிக் கொண்டு, அண்ணனைப் போலவே உடையணிந்து, டீமில் இணைந்து அசத்திய தங்கை.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் :-
சிறுமியாக இருந்தபோது தினமும் அம்மாவிடம் திட்டு வாங்குவார் சல்வார் கமீஸ் அணிந்து கொள் சமையல் கற்றுக்கொள் என, ஆனால் என்ன செய்ய? கரண்டியை விட மட்டையும், பந்தும் தான் கௌரைக் கவர்ந்தது. அப்போது இலக்கில்லாமல் திரிவதாக வந்தன விமர்சனங்கள். இன்று உலகக் கோப்பையென்னும் இலக்கை இவர் தலைமையில் வென்றது அணி.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் :-
மன உளைச்சலால் ஒரு கட்டத்தில் விளையாட்டை விட்டுவிட நினைத்தவர் இன்று நட்சத்திர ஆட்டக்காரர்.

ஆட்ட நாயகி தீப்தி ஷர்மா:-
கிரிக்கெட்டில் சாதிக்க இவரது அண்ணன் தனது வேலையைத் துறந்து இவருக்குத் துணை நின்றார்.

வேகப் பந்துவீச்சாளர் ரேணுகா சிங் டாகூர்:
மூன்று வயதாக இருந்தபோதே தந்தையை இழந்தவர். தாயார் அரசாங்கத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து மகளை இந்த உயரத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.

பந்துவீச்சாளர் ராதா பிரகாஷ் யாதவ்:-
தந்தையார் பெட்டிக்கடையில் காய்கறி, பால் விற்பவர். இரவல் பந்து, இரவல் மட்டையில் தான் பயிற்சி பெற்றார்.

பந்து வீச்சாளர் க்ராந்தி கௌட்.:-
அப்பாவுக்கு கான்ஸ்டபிள் வேலை போய்விட்டதால், ஒரு வேளை உணவுக்கே திண்டாட்டம் தான். அம்மா தன் நகையெல்லாம் அடகு வைத்துத்தான், க்ராந்தியின் கனவை நிறைவேற்றினார்.

விக்கெட் கீப்பர் உமா சைத்ரி :-
தினமும் 16 கி.மீ நடந்தே சென்று பயிற்சி பெற்றார். பாரதத்தின் வடகிழக்கில் உருவான முதல் கிரிக்கெட் வீராங்கனை இவர் தான்.

அண்ணனுக்காக தங்கை; தங்கைக்காக அண்ணன்; மகளுக்காக தன் கையால் மட்டை தயாரித்த தந்தை, நகையை அடகு வைத்து செலவழித்த தாய் என சாதனையாளர்களை உருவாக்கிய சாதனையாளர்கள் இவர்கள்.