கொலு பொம்மைகள்

பொம்மை கொலு, பொம்மே ஹப்பா (கன்னடம்), பொம்மல கொலு (தெலுங்கு), என எப்படி வேண்டுமானாலும்  அழைக்கலாம். சொந்தங்கள் தெரிந்தவர்கள், நண்பர்கள் இல்லத்திற்கு வருவது, தேவியை பிரார்திப்பது, பாடல்களில் கரைவது, சுண்டல் இனிப்பு வழங்கி பேசிச் சிரித்து மகிழ்வது நவராத்திரி விசேஷம்.

அனுபவம்

தேவியை சக்தி ரூபமாய் வழிபடுதல் – சக்தியை உருவாக்கவோ, அழிக்கவோ இயலாது என்பது விஞ்ஞானபூர்வ உண்மை. துர்க்கை சக்தி வடிவம். அசுரர்களை, நமக்குள் இருக்கும் கெட்ட விஷயங்களை, மோசமான சக்திகளை அழித்து ஒழிக்க விஸ்வரூபம் எடுக்கும் பெண் சக்தி. இங்கு இறைவனைத் தாய் வடிவில் கொண்டாடுகின்றோம்.

கொண்டாட்டம்

வண்ணங்கள், இசை, வகைவகையான உணவு – மூன்றின் கலவை சந்தோஷத்தைச் சுமந்து வருவது இயல்பே. எங்கு காணினும் கண்ணைக் கவரும் கோலங்கள் ரங்கோலி, சுகமான நவரச கானடாவில், ‘நானொரு விளையாட்டு பொம்மையா’ (பாபனாசம் சிவம்) கீரவாணியில், ‘தேவி நீயே துணை’, ஆனந்த பைரவியில், ‘கற்பகவள்ளி நின் பொற்பதங்கள்’ என இழைந்தோடும் கொலு. விதவிதமான சுண்டல்கள் பற்றியே தனியாக எழுதலாம்.

பொம்மைகள்

koluயை உருவகப்படுத்தும் ஒன்பது படிகள்.தேவர்கள், தேவியர், மனிதர்கள், மிருகங்கள், புல் பூண்டுகள், நடுநாயகமாக மாவிலை தேங்காய், கலசம், பின்னால் கண்ணாடி, என கொலு பொம்மைகளை அடுக்குவதற்கென சாஸ்திரம் உண்டு. ஆந்திராவின் மரப்பாச்சி பொம்மைகளை ஜோடியாய் அலங்கரிக்க வேண்டும்.

வளமையை வெளிப்படுத்தும் செட்டியாரும் செட்டிச்சியும் சமூகத்தில் வாணிபம் செழித்தால், மக்கள் செழிப்பாக உள்ளனர் என்பதற்கு அத்தாட்சி. ராமனும் சீதையும் ஹனுமானும் ஒரு செட், ராமாயணக் கதைகளைப் பெரியவர்கள் சொல்லக் கேட்டது அந்த காலம். மழலை வாயால் பெரியவர்கள் கேட்டு மகிழ்வது இந்தக் காலம். கல்யாண செட் இல்லாமல் களைகட்டுமா? பெருமாள் – தேவியின் தெய்வீக கல்யாணம், மீனாட்சி கல்யாண வைபோகம். விஷ்ணு, சிவன், தசாவதாரம் செட், கிருஷ்ணர் செட், கணபதி, லட்சுமி, சரஸ்வதி, துர்கை, ராமாயணம் செட், புண்ய புருஷர்கள்  – ரமணர், மீரா, ராமகிருஷ்ணர் பரமஹம்சர், விவேகானந்தர் செட், கோயில் செட், பேண்டு வாத்திய கச்சேரி செட், வணிக பொம்மைகள் என வரிசையாக வைக்க வேண்டியதுதான். புது பொம்மைகள வாங்குவதும் பரிசளிப்பதும் கலை. அதுவே கலை என்றால் பொம்மைகள் செய்வது?

பொம்மை கலை

கடலூர் அருகில் வண்டிப்பாளையம், மணவெளி, பாளையம் போன்ற ஊர்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொம்மைகளைச் செய்து விற்று வருகிறார்கள். மதுரை விளாசேரியிலும், பண்ருட்டியிலும் வருஷம் பூராவும் மக்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். களிமண் பொம்மைகளே பாரம்பரியமாக கொலுவினை அலங்கரிக்கின்றன. சீனாவின் மலிவு விலை பொம்மைகள் கம்மி விலையானாலும் வாங்கக் கூடாது. வசந்தி என்ற 63 வயது  கலைஞர் சொல்கிறார்  பொம்மைகளுக்கு கண்களை எழுதி அவற்றுக்கு உணர்வு கொடுப்பதே மிகக் கடினம். அதைச் செய்யக் கற்றுக்கொண்டுவிட்டால் எதை வேண்டுமானாலும் செய்ய இயலும்” என்கிறார். இருக்குமோ?

விஜயவாடா அருகில் கொண்டபள்ளியில் மெல்லிய பொனிகிமர பொம்மைகள் செய்யப்படுகின்றன. துண்டு துண்டாக செய்து, புளியம் விதைகளை அரைத்து கோந்து செய்து ஒட்டி, எலுமிச்சையை உபயோகித்து ஒரு பூச்சு கொடுப்பார்கள். மரப்பொம்மைகள், குதிரைகள், பேனா வைக்கும் ஸ்டாண்டுகள் எல்லாம் சென்னபட்னாவில் இருந்து வருகின்றன. ராஜஸ்தானத்தில் இருந்து நடனம் ஆடும் பொம்மைகள் விஷேச அலங்காரங்களுடன் வருகின்றன. கொல்கத்தாவில் இருந்து தசரா கொண்டாட்டத்திற்கு துர்கா தேவியின் பெரிய பெரிய பொம்மைகள் தயாரித்து தொலைதூர ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

பொம்மைகளில் புதுமை

எதிலும் மாற்றங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நமது பாரம்பரிய  ‘முதல் குடும்பம்’ கைலாச குடும்பம், பார்வதி, சிவன், சோமாஸ்கந்தன், கணேசன், ஞானப்பழம், கிராமியசெட், திருமண நிகழ்ச்சி, பாரதத்தின் பல்வேறு  மாநிலங்களின்  ஆடை அலங்காரம் என ஏகத்துக்கு கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக விஷயங்கள் இருக்க எல்லையை காக்கும் நமக்காக உயிரையே தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் பொம்மைகளையும் வைக்கலாமே.

சபதம் ஏற்போம்

பாரம்பரிய திருவிழா – பட்டு, பாட்டு, சுண்டல், இனிப்பு, பக்தி,கொலு பொம்மைகள், தாம்பூலம் என இருக்க வேண்டியதை கெமிக்கல்கள் பூசப்பட்ட பொம்மைகள், ஆடம்பரமான கிஃப்ட்கள் என திசை மாற்றிவிடக் கூடாது. இயற்கை சாயம் பூசப்பட்ட,  காய்கனிகளில் இருந்து பெறப்பட்ட வண்ணங்கள் பூசின களிமண் பொம்மைகளையே வாங்குவோம், பரிசளிப்போம்.