திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில், மக்கள் கூட்டத்தை திரட்டி, கொங்கு மண்டலத்தில் பா.ஜ., பலத்தை நிரூபித்துள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் என் மண்; என் மக்கள் யாத்திரையை, ஜூலை 29ல் ராமேஸ்வரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார். மாநிலம் முழுதும், 234 சட்டசபை தொகுதிகளிலும் நடந்த யாத்திரையின் நிறைவு விழா மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதற்காக மாதப்பூர் கிராமத்தில், 1,000 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு, பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பிற்பகல் 3:00 மணிக்கு பிரதமர் மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பகல் 11:00 மணியில் இருந்தே கட்சித் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வரத் துவங்கினர். 2:00 மணிக்குள் அனைத்து நாற்காலிகளும் நிரம்பின. அதன்பின் வந்தவர்கள் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வெயிலையும் பொருட்படுத்தாமல் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டது, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை உற்சாகப்படுத்தியது. ஹெலிகாப்டரில் வந்திறங்கியதும், திறந்த காரில் கூட்டத்திற்கு இடையே அமைக்கப்பட்டிருந்த பாதையில் வந்த மோடி, இரண்டு கைகளை அசைத்தும், மேடையில் அண்ணாமலையை தட்டிக் கொடுத்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கடந்த 1952 முதல் பொது தேர்லில் இருந்தே தமிழகத்தில் ஜனசங்கம் சார்பில் போட்டியிட்டாலும், 1996க்குப் பின் குறிப்பிடத்தக்க ஓட்டுகளை பா.ஜ., பெற ஆரம்பித்தது. கன்னியாகுமரிக்கு அடுத்து கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி லோக்சபா தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை பெற்று, மற்ற அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது.
அதைத்தொடர்ந்து, 1998ல் அ.தி.மு.க., 1999ல் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் எம்.பி.,க்களை பெற்றது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்றதும், தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தன் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டது. அதனால் தான், சென்னையில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட யாத்திரை நிறைவு விழா, கொங்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டது. 2021 சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்தாலும், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., கூட்டணியே அதிக இடங்களில் வென்றது.
இதற்கு, பா.ஜ., – அ.தி.மு.க., என இரு கட்சிகளும் உரிமை கோரி வரும் நிலையில், கொங்கு மண்டலத்தில் இரு தொகுதிகளிலாவது வென்று காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ., களமிறங்கியுள்ளது.
பல்லடம் விழாவில் பெரும் எண்ணிக்கையில் திரண்ட கூட்டத்தின் வாயிலாக, கொங்கு மண்டலத்தில் வலிமையான சக்தி என்பதை பா.ஜ., நிரூபித்துள்ளது. இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் வந்திருந்ததும், அவர்கள் காட்டிய உற்சாகமும் பா.ஜ.,வினரை உற்சாகப்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து 20 கி.மீ., துாரத்திலும், பல்லடத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும் விழா நடந்தாலும் திருப்பூர், பல்லடம் நகரம் முழுதுமே பா.ஜ., கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டு, அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
பிரதமர் மோடியின் வருகை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததால், திருப்பூர், பல்லடத்தில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு, நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டது. பல்லடம் பொதுக் கூட்டத்தில் பலத்தை காட்டி, தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் பா.ஜ., சவால் விடுத்துள்ளது. ஆனால், தி.மு.க., – அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரிடம் பல்லடம் பா.ஜ., நிகழ்ச்சி பற்றி கேட்டபோது, ‘கூட்டம் வரலாம். ஆனால், தேர்தல் களம் என்பது வேறு. ஓட்டுச்சாவடி அளவில் வலுவான குழு இல்லாவிட்டால், தேர்தலில் இரட்டை இலக்கில் ஓட்டு சதவீதத்தை தொட முடியாது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு அடிப்படை கட்டமைப்புகள் இல்லை’ என்றனர்.