ராகுல் சொன்னதுபோல் ‘Modilie’ என்ற வார்த்தையே இல்லை – ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரீஸ்
ஆங்கில அகராதியில் ‘மோடி பொய்’ என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாக காங்., தலைவர் ராகுல் டுவீட் செய்திருந்ததை, போலி என ஆக்ஸ்போர்ட் அகராதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மே 15 அன்று ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கில அகராதியின் பக்கம் ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டதுடன், ஆங்கில அகராதியில் ‘modilie’ என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் modilie.in என்ற பெயரில் இணையபக்கம் ஒன்று துவங்கப்பட்டு, அதில் பிரதமர் மோடி இது வரை கூறிய பொய்கள் பட்டியல் இடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ராகுலின் இந்த டுவிட்டர் பதிவை சுட்டுக்காட்டி உள்ள ஆக்ஸ்போர்டு அகராதி நிர்வாகம், அவர் பகிர்ந்துள்ளது போலியான படம். ஆங்கில அகராதியில் அப்படி எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு அகராதி என ராகுல் தனது டுவீட்டில் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஆக்ஸ்போர்டு அகராதியின் பக்கம் போன்ற ஒரு பக்கம் காங்.,ன் விளம்பத்துடன் உருவாக்கப்பட்டு, ஸ்கிரீன்ஷாட் செய்து பகிரப்பட்டுள்ளது. modilie என்ற வார்த்தைக்கு அர்த்தமாக, உண்மையை தொடர்ந்து திரித்து கூறுபவர், இடைவிடாமல் பொய் சொல்வதை தனது பழக்கமாக கொண்டவர், ஓய்வில்லாமல் பொய் பேசுபவர் என்பன போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ள ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் பகிர்ந்திருந்தார்.
இவ்வாறு போலியான ஒரு படத்தை பகிர்ந்து, பிரதமர் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதற்காக ராகுலை, பா.ஜ., ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.