தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி, வேடம் அணிந்தனர்.
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயிலில் தசரா திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நேற்று தொடங்கியது.
நேற்று அதிகாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது. கொடிப்பட்டம் கோயிலை வந்தடைந்தவுடன், காலை 9.20மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் ‘தாயே முத்தாரம்மா’, ‘எங்கள் அம்மா முத்தாரம்மா’, ‘ஓம் காளி, ஜெய்காளி’ என்றெல்லாம் முழக்கமிட்டனர். தொடர்ந்து, கொடிமரத்துக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு அணிந்தனர். விழா நாட்களில் இவர்கள் பல்வேறு வேடம் தரித்து, ஊர், ஊராகச் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பர்.
இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்தார். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 24-ம் தேதிநடைபெற உள்ளது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக எழுந்தருளி, மகிசாசூரனை வதம் செய்வார்.