குறை உடலில், நிறை உள்ளத்தில்! மகான்களின் வாழ்வில்

காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் கும்பகோணத்தில் 1921ம் ஆண்டு மகாமகத்தில் கலந்துகொள்ள முகாமிட்டிருந்தார். சுவாமிகளை தரிசிக்க பக்தர்கள் பலர் காத்திருந்தனர்.

கூடியிருந்த பக்தர்களை  தமது அருள் பார்வையால் நோக்கிய சுவாமிகள், வெகு தொலைவில் ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பார்த்தார். அவரை சுவாமிகள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. ஆயினும் தமதருகே இருந்த பணியாளரிடம் அவரை தம்மருகே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

சுவாமிகள் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய அவர், நாடு விரைவில் சுதந்திரம் பெறவேண்டும். மக்களுடைய உள்ளத்தில் தேசபக்தி உணர்வு வீறுகொண்டு எழவேண்டும். சுவாமிகள் இதற்கு அருளாசி வழங்கவேண்டும்” என்று வேண்டினார்.

அப்போதுதான் வந்தவர்  சுப்பிரமணிய சிவா என்பதை சுவாமிகள் தெரிந்து கொண்டார். அவர் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே நடைபெறும் என்று ஆசிர்வதித்தார்.

திண்டுக்கல் வத்தலகுண்டில் பிறந்து, வ.உ.சியுடன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று,  வாட்டசாட்டமான உடலோடு சிறை சென்ற சுப்பிரமணிய சிவா, தொழுநோயாளியாக வெளியே வந்தார்.

இப்படிப்பட்ட மிக சிறந்த தேச பக்தரான சுப்பிரமணிய சிவா, தன்னை ஆசிர்வதியுங்கள் என்று கேட்கவில்லை. அப்போதும் தேசம் விடுதலை பெறவேண்டும் என்றே வேண்டினார்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்