குரு பூர்ணிமா என்பது நமது ஹிந்து தர்மத்தில் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்று. குரு பூர்ணிமா நாளில் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டிய குருவை வணங்கி ஆசி பெற்றால் குருவருளுடன் திருவருளும் கிடைக்கும். குரு பூர்ணிமா என்பது சாதாரண உயிரைக்கூட முழுமையை உணர்ந்து இறை நிலையை நோக்கி உயர்த்தக் கூடியத் திருநாள்.
சமஸ்கிருத வார்த்தையான ‘குரு’ இரண்டு வேர்களைக் கொண்டுள்ளது. ‘கு’என்றால் ‘இருள்’ என்றும் ‘ரு’ என்றால் நீக்குவது என்று பொருள். நமது மனதில் உள்ள அறியாமை எனும் இருளை நீக்குபவர் என்று பொருள்.
எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞான செல்வத்தை அள்ளி தரும் குருநாதருக்கு ‘அவ்யாஜ கருணாமூர்த்தி’ என்றே ஒரு திருநாமமும் உண்டு.
மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள், இதில் மாதா என்பது இடகலை, பிதா பிங்கலை. குரு என்பது சுழுமுனை சுவாசம். இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகதத்துவம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக கூறப்படுகிறது, எனவே இது வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. வேத வியாசர் வேதங்களை, ரிக், யஜூர், சாமம் அதர்வணம் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியவர். உலகின் பிரம்மாண்ட காவியமான மகாபாரதம், 18 புராணங்கள், பிரம்மசூத்திரம் முதலானவற்றை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாச மகரிஷி கூற அதனை விநாயகப் பெருமான் எழுதினார் என்கிறது புராணம்.
அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, ஒருவர் பல பாடுகள் பட்டாக வேண்டும் எனும் நிலையில் அழியாத சொத்தான ‘ஞானத்தை’ நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது குருவினால் மட்டுமே முடியும்.
பூர்ண நிலையில் தன்னுள் இருக்கும் குருத் தன்மையை உணர ஒவ்வோரு உயிர்களுக்கும் சாதகமாக அமைந்த நாள்தான் குரு பூர்ணிமா.