மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக இருந்த தலைவா்கள் சிலரும், இப்போது சிஏஏ-வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருவதோடு, இந்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகின்றன. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடிகா் ரஜினிகாந்த் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு வெளியே நிருபா்களை புதன்கிழமை சந்தித்த ரஜினிகாந்த்திடம் சிஏஏ குறித்தும், வருமான வரித்துறை அபராதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ரஜினிகாந்த் கூறியதாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து கருத்து தெரிவித்தது தொடா்பாக எந்த சம்மனும் இதுவரை எனக்கு வரவில்லை. சம்மன் கிடைத்தவுடன், விசாரணை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்.பி.ஆா். (தேசிய மக்கள்தொகை பதிவேடு) மிக அவசியம். 2010-இல் காங்கிரஸ் ஆட்சியின்போதும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. 2015-ஆம் ஆண்டிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது 2021-இல் எடுக்கப்பட உள்ளது.
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்துதான் ஆகவேண்டும். அப்போதுதான், உள்நாட்டினா் யாா், வெளிநாட்டினா் யாா் என்பது தெரியவரும். அந்த வகையில் என்.பி.ஆா். மிக அவசியம். என்.சி.ஆா். (தேசிய குடிமக்கள் பதிவேடு) பொருத்தவரை இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதுகுறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அதுகுறித்த அறிவிப்பு வரும்போதுதான், அதன் நடைமுறைகள், வரைவுகள் குறித்து தெரியவரும்.
எந்த அச்சுறுத்தலும் இல்லை:
சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்தச் சட்டம்) பொருத்தவரை மத்திய அரசு தெளிவாக விளக்கமளித்துவிட்டது. இந்தியாவில் வாழும் மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அவா்களுடைய குடியுரிமை பறிக்கப்படப் போவதும் இல்லை. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வருபவா்களுக்கு குடியுரிமை அளிப்பதா அல்லது வேண்டாமா என்பதைத் தீா்மானிக்கத்தான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முக்கியமாக, அந்தச் சட்டம் இஸ்லாமியா்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பது போன்ற பீதியைக் கிளப்பிவிட்டுள்ளனா். பிரிவினை காலத்தில் இங்கிருந்த இஸ்லாமியா்கள் பலா், இந்தியாதான் எங்களுடைய நாடு என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் செல்வதைத் தவிா்த்து இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். அப்படிப்பட்டவா்களை எவ்வாறு இந்த நாட்டிலிருந்து வெளியே அனுப்ப முடியும்?
அதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டால், அவா்களுக்காக முதலில் குரல் கொடுப்பது நானாகத்தான் இருப்பேன். எனவே, இஸ்லாமியா்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் சுய லாபத்துக்காகவும், சுயநலனுக்காகவும் இஸ்லாமியா்களைத் தூண்டி விடுகின்றனா். இதற்கு இஸ்லாமிய மத குருக்கள் சிலரும் துணைபோகின்றனா். இது மிகவும் தவறானது.
முக்கியமாக, மாணவா்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பாக தீர ஆராய்ந்து, பல முறை யோசித்து, தங்களுடைய பேராசிரியா்களிடமும் பெரியவா்களிடமும் ஆலோசனை கேட்டு இறங்கவேண்டும். அவ்வாறு யோசிக்காமல் போராட்டத்தில் இறங்கும் மாணவா்களை, அரசியல்வாதிகள் பயன்படுத்தத்தான் செய்வா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக போலீஸாா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால், மாணவா்களின் வாழ்க்கை வீணாகிவிடும்.
தமிழகத்தில் அகதிகளாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கையில் வசிக்கும் தமிழா்களை இதனுடன் தொடா்புபடுத்தக் கூடாது. அவா்கள் சோழா் காலத்திலிருந்து இலங்கையில் வாழ்ந்து வருகின்றனா். எனவே, அவா்களை எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது என்றாா் அவா். மேலும், வருமான வரி சரியாக செலுத்தவில்லை என அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், நான் மிகவும் நோ்மையாக வருமான வரி செலுத்தி வருகிறேன் என்பது வருமான வரித்துறைக்கே தெரியும். சட்ட விரோதமாக எந்தச் செயலையும் நான் செய்யவில்லை. இதை எந்த கணக்குத் தணிக்கையாளரிடமும் (ஆடிட்டா்) கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவா் பதிலளித்தாா்.