”மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது குடியுரிமை வழங்கும் சட்டமே தவிர, குடியுரிமையை பிடுங்கும் சட்டமல்ல; லோக்சபாவில் இயற்றும் சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த தவறினால், அது சட்டத்திற்கு புறம்பானது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கட்டாயம் தேவை
‘சென்னை சிட்டிசன்ஸ் போரம், நியூ இந்தியா போரம்’ ஆகியவை சார்பில், ‘குடியுரிமை சட்டத் திருத்தம் – 2019’ தொடர்பான விளக்கக் கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில், நடந்தது.இந்த கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியாவில், 1955ம் ஆண்டு முதல் குடியுரிமை சட்டம் அமலில் உள்ளது. இந்தியாவில் பிறப்பு, இந்திய வம்சாவளி, இந்தி யரை திருமணம் செய்து பதிவு செய்தல், இந்திய கலாச்சாரத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆராய்ச்சி செய்தல் போன்றவற்றின் அடிப்படையில், இந்திய குடியுரிமை வழங்கப் படுகிறது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி, இந்த நான்கு விதிகளும் பின்பற்றப்படும். இது தவிர, கூடுதலாக சிலருக்கு குடியுரிமை வழங்க, இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. திருத்தம் என்பது கட்டாயம் தேவையான ஒன்று.
கொண்டு வந்தது காங்.,
கடந்த, 1947ல், இந்தியா – பாகிஸ்தான் பிரிந்த போது, பாகிஸ்தானில் இருந்து வந்த ஏராளமானோருக்கு, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இதில், 36 ஆயிரம் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; விடுப்பட்ட, 5,300 குடும்பங்களுக்கு, சமீபத்தில் இழப்பீடு வழங்கப் பட்டது.பாகிஸ்தானில் இருந்து வந்து, முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு, லோக்சபா தேர்தலில் மட்டும் ஓட்டளிக்க முடியும் என, அரசியலமைப்பு சட்டம், 370ல் கூறப்பட்டிருந்தது. இந்த சட்டம் நீக்கப்பட்டதால், அவர்களுக்கு சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை கிடைத்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது, குடியுரிமை வழங்குவதற்கானது மட்டுமே தவிர, குடியுரிமையை பிடுங்குவதற்காக அல்ல. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து, 2006, 2007ல், பார்லிமென்ட் நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆறு ஆண்டுகளில், பாகிஸ்தானை சேர்ந்த, இஸ்லாமியர்கள் உட்பட, 2,838 பேர்; ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 914 பேர், வங்க தேசத்தை சேர்ந்த, 172 பேருக்கும், இந்திய குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது.
2014- முதல், 566 இஸ்லாமியர்களுக்கு, குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 1964- முதல், 2008 வரை, 4.61 லட்சத்திற்கும் மேற்பட்ட, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது. இந்த குடியுரிமை தொடர்ந்து வழங்கப்படும்.உண்மைக்கு புறம்பாக, குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து, தவறாக பேச வேண்டாம்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துடன், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு இரண்டையும் ஒப்பிட வேண்டாம். இந்த சட்டங்களை கொண்டு வந்ததது காங்கிரஸ் அரசு தான். ஆனால், அவர்களே, தற்போது எதிர்க்கின்றனர்.
மாநில அரசுகளின் கடமை
அசாமில் பின்பற்றப்படும் தேசிய குடியுரிமை பதிவேடு, இதர மாநிலங்களுக்கு பொருந்தாது. அது, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செயல்படுத்தப் படுகிறது.’குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம்’ என, மாநில அரசுகள் கூறுவது, சட்டத்திற்கு புறம்பானது. லோக்சபாவில் நிறைவேற்றப்படும் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது, மாநில அரசுகளின் கடமை. முகாமில் உள்ள, 90 ஆயிரம் இலங்கை தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.