இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. பொய் பிரசாரத்தால் மக்கள் மனதில் சிலர் சந்தேகத்தை விதைத்துள்ளனர், என்று மத்திய அரசு நினைக்கிறது. அந்த சந்தேகங்களை போக்க கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
* குடியுரிமை திருத்த சட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறதா?
இல்லை. CAA என்ற குடியுரிமை திருத்த சட்டம் வேறு. NRC என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு. குடியுரிமை திருத்த சட்டம் என்பது பார்லிமென்ட் ஒப்புதல் அளித்த பின், இப்போது அமலுக்கு வந்துள்ளது. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கான விதிகள், நடைமுறைகள் இன்னும் முடிவாகவில்லை.
* அப்படி என்றால் அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தது எப்படி?
அசாமில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டு மக்களை கண்டுபிடித்து திருப்பி அனுப்ப அந்த மாநிலத்தில் போராட்டம் நடந்தது. அப்போது இருந்த அரசு அதை ஏற்றுக் கொண்டது. அதன்படி 1985ல் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை செயல்படுத்த உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி அந்த மாநிலத்தில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி நடந்தது.
* குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதா?
இல்லவே இல்லை. குடியுரிமை திருத்த சட்டம் பற்றியும், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியும் எந்த மதத்தை சேர்ந்த இந்திய குடிமக்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
* குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப் போகிறார்களாமே?
இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு எந்த மதத்தையும் குறி வைக்காது. பல நாடுகளில் இருப்பதை போல இது இந்த நாட்டு குடிமக்களின் பெயர், விவரங்கள் இடம் பெறக்கூடிய ஒரு பதிவேடு. அவ்வளவுதான்.
* தேசிய குடிமக்கள் பதிவேடு தயாராகும்போது, மத அடிப்படையில் யாராவது விலக்கி வைக்கப்படுவார்களா?
இல்லை. அந்த பதிவேடு மதத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படாது. பதிவேடு அமலுக்கு வரும்போது, அது மதம் தொடர்புடையதாகவோ, மதத்தின் அடிப்படையிலோ நிச்சயம் இருக்காது. ஆகவே, மத அடிப்படையில் எந்த நபரும் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட மாட்டார்.
* பதிவேடு தயாரிக்கும்போது, நாங்கள் இந்தியன் என்பதற்கான ஆதாரங்களை காட்டும்படி கேட்பீர்களா?
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணியை தொடங்க எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. அறிவிப்பு வெளியிட்டு பணி தொடங்கினாலும், ஒவ்வொருவரும் தான் இந்தியன் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை காட்டுமாறு கேட்கப்போவது இல்லை. ஒவ்வொரு குடிமகனின் பெயரையும் பதிவு செய்யும் ஒரு சாதாரண நடைமுறைதான் தேசிய குடிமக்கள் பதிவேடு. வாக்காளர் அடையாள அட்டை வாங்கவும் ஆதார் கார்டு வாங்கவும் பொதுமக்கள் எவ்வாறு தம்மிடம் உள்ள ஆவணங்களை காட்டுகிறார்களோ அதே போல இதற்கும் காட்டினால் போதும்.
* ஒருவர் இந்திய குடிமகன் என்பது எப்படி முடிவு செய்யப்படுகிறது? அதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறதா?
2009ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை விதிகளின் அடிப்படையில் ஒருவரின் குடியுரிமை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதிகள் இந்திய குடியுரிமை சட்டம் 1955 ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்த விதிகள் என்ன என்பதை ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.
* ஆன்லைன் இருக்கட்டும்; ஆப்லைனில் இப்போது சொல்லுங்களேன்?
எந்த ஒரு நபரும் இந்திய குடிமகன் ஆவதற்கு ஐந்து வழிகள் இருக்கின்றன.
1. பிறப்பால் வருவது(-Citizenship by Birth). இந்தியாவில் பிறந்தால் இந்திய குடிமகன்தான். வேறு எந்த ஆதாரமும் தேவை இல்லை.
2. மரபு வழி குடியுரிமை (Citizenship by descent). பெற்றோர் இந்தியர்களாக இருந்தால் குழந்தை இந்திய குடிமகன் ஆகலாம்.
3. பெயரை பதிவு செய்வதன் மூலம்(Citizenship by registration).
4. Citizenship by naturalization
5. Citizenship by incorporation
இதில் 3, 4, 5 ஆவது வழிகள் குறித்த விளக்கத்தை இந்திய அரசின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* நான் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க என் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் போன்ற விவரங்களை அளித்தாக வேண்டுமா?
வேண்டியது இல்லை. நீங்கள் பிறந்த தேதி, மாதம், ஆண்டு, இடம் ஆகிய விவரங்களை அளித்தால் போதும். உங்களது பிறப்பு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் உங்கள் பெற்றோரின் பிறப்பு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யலாம். எந்த ஆவணங்கள் ஏற்புடையது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பாலிசி, பிறப்பு சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), நிலப் பத்திரம், வீட்டு பத்திரம் போன்ற ஆவணங்களை காட்டியும் குடியுரிமையை நிரூபிக்க முடியும். இந்த பட்டியலில் இன்னும் சில ஆவணங்களை சேர்ப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. ஆவணம் இல்லை என்பதால் எந்த இந்தியரும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம்.
* தேசிய குடிமக்கள் பதிவேடுக்காக, 1971க்கு முன்பிருந்த எனது மூதாதையர் குறித்த ஆதாரங்களை கட்டாயம் அளிக்க வேண்டுமா?
நிச்சயமாக இல்லை. 1971க்கு முந்தைய மூதாதையர் விவரங்கள் என்பது, அசாமுக்கு மட்டும்தான் பொருந்தும். அது அசாம் உடன்படிக்கை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கேட்கப்பட்டது. நாட்டின் இதர பகுதிகளில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி அசாமிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். 2003ம் ஆண்டு விதிகள் அடிப்படையில் பதிவேடு தயார் செய்யப்படும்.
* ஒருவர்தான் இந்தியன் என்பதை எளிதில் நிரூபிக்கலாம் என சொல்கிறீர்கள். ஆனால் அசாமில் 19 லட்சம் பேர் இந்த பதிவேடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்களே?
அசாமில் ஊடுருவல் பிரச்னை நீண்டகாலமாக இருக்கிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று அசாமில் மக்கள் இயக்கம் நடந்தது. ஊடுருவியவர்கள் யார் என்பதை கண்டறிய 1985 ல் அப்போதைய பிரதமர் ராஜிவ், அசாம் மக்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அப்போது 1971 மார்ச் 25 என்பதை ‘கட் ஆப்’ தேதியாக வைத்துக் கொள்ளலாம் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆகவே, மற்ற மாநிலங்களில் பதிவேடு தயாரிக்கும்போது அந்த தேதியை பயன்படுத்தப்போவது இல்லை.
* பதிவேடு தயாரிப்பு பணி நடக்கும்போது, இல்லாத பழைய ஆவணங்களை கொண்டு வரச்சொல்லி கட்டாயப் படுத்துவார்களா?
மாட்டார்கள். பிறப்பு சான்றிதழ் போன்ற சாதாரண ஆவணங்களைதான் கேட்பார்கள். யாருக்கும் எந்த பிரச்னையும் வராத அளவுக்கு அரசின் விதிமுறைகள் இருக்கும். மக்களை துன்புறுத்த வேண்டும்; பிரச்னைக்கு உட்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல.
* ஒருவர் படிக்காதவராக அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவராக இருந்தால் அவரது கதி என்ன?
அப்படி இருந்தால் ‘இதோ இவரை வேண்டுமானால் கேளுங்கள்’ என்று சாட்சியாக ஒரு நபரை அவர் அழைத்து வரலாம். அக்கம் பக்கத்தில் வசித்தவர்களிடம் விசாரித்தும் விவரம் பதிவு செய்யலாம். நடுநிலையான நடைமுறைகள் பின்பற்றப்படும். யாருக்கும் தேவையற்ற பிரச்னை வராது.
* வீடே இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பரம ஏழைகள், படிக்காதவர்கள் அதிகம். அவர்கள் தன் அடையாளத்தை உறுதி செய்ய எந்த ஆதாரங்களும் இருக்காது. அவர்களால் என்ன செய்ய முடியும்?
கேள்வியே தவறு. எந்த ஒரு அடையாளமும் இல்லாமலா ஓட்டு போடுகிறார்கள்? ஆதாரமே காட்டாமலா ரேஷன் கார்டு பெறுகிறார்கள்? அரசு நலத் திட்டங்கள் மூலம் பலன் பெறுவதற்கும் ஆவணங்களை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏதாவது ஒன்றை காட்ட முடியும்.
* திருநங்கைகள், நாத்திகர்கள், ஆதிவாசிகள், தலித்கள், நிலமில்லாத ஏழைகள் ஆகியோர் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட மாட்டார்களாமே?
அப்பட்டமான பொய். அவர்களில் யாருக்குமே பாதிப்பில்லை.