மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய உதாரண புருஷரான ஸ்ரீ ராமர் அவதாரம் எடுத்த தினத்தை ராம நவமியாக இந்துக்கள் உலகெங்கும் கொண்டாடி வரும் இந்நேரம் “ஐவரில் ஒருவரானோம்” என்ற சொற்றோடரில் மிளிரும் குகனின் அடக்கம் பற்றியும் அதே நேரம் அவன் மூலம் நமது நாட்டு மக்கள் தமது கலாச்சாரத்தின் கண்களில் ஒன்றாகக் கருதிய மனித மாண்பு
பற்றியும் உங்களுக்காக;
மனித வாழ்வில் நல்லறம், ஒழுக்கம் என்றால் ஏதோ ஒரு வாழ்வியலுக்கு சம்பந்தமில்லாத பிற்போக்கான கருத்து என அறிவியல் ரீதியாக அறிவிலிகள் சிலர் தற்போதெல்லாம் நினைக்க, பேசத் துவங்கி விட்டார்கள. வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் போன்ற ஒரு சமூகப் பொருளை அறிவதற்கு அறிவியல் முறையை பயன்படுத்துகின்றன என்பது உண்மைதான். ஆனால் புராண ரீதியான சமூக அறிவியல்களில் பரிசோதனைக் கூடங்கள் அல்லது பரிசோதனைகள் சாத்தியமில்லை. பெளதீக அறிவியல்கள் ஒரு திட, திரவ அல்லது வாயுப்பொருளை மட்டுமே ஆராய்கின்றன. ஆனால் ராமாயணம் மஹாபாரதம் போன்ற சமூக அறிவியல்கள் மனிதர்களைப் பற்றி ஆராய்கின்றன.
பன்னிரு ஆழ்வார்களும் சரி….அறுபத்துமூன்று நாயன்மார்களும் சரி…பக்தி இலக்கியத்துக்குச் செய்த தொண்டு நீண்ட இலக்குக் கொண்டு செய்ததாகும். இவ்விலக்கியங்கள் மனித வாழ்வில் நல்லறத்தை நவில்கின்றன. தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல ஒழுக்கங்களைத் தன் இராமகாதை மூலம் காட்டுகிறார் கம்பர். அத்தகைய நெறிகளில் ஓரிரண்டை கம்பன் மூலமே அறிவோம்.. துணைக்கு சங்க இலக்கியங்களையும், அவற்றில் விரவிக்கிடக்கும்
மாண்புத்தன்மையரையும் அவ்வப்போது நினைவில் கொள்வோம்.
இராமனைத் தேடிக்கொண்டு ஒரு பெரும் படையையே திரட்டிக்கொண்டு கைகேயி குமாரன் பரதன் கானகம் ஏகுங்கால் அங்கே குகனைச் சந்திக்கிறான். பரதனும் குகனுமே இராமனிடம் பெருத்த அன்புடையவர்கள். ஆதலால் பரதன் குகனிடம், இராமன் எங்கே படுத்திருந்தான்? என்று கேட்கிறான். தர்ப்பைப் புற்களால் ஆன மெத்தை
ஒன்றையும் , தலைக்குத் தாங்கல் ஆகக் கொள்ள கல் ஒன்றையும் காட்டுகிறான். ”இதில் தான் இராமன் உறங்கினான்”, என்றழுதவாறே குகன் பகர்கிறான்..
“ சரி. இலக்குவன் எங்கே படுத்திருந்தான்?” :இது பரதன் கேட்கும் அடுத்த கேள்வி இங்குதான் கம்பர் காட்டும் தமிழ் நாட்டு மக்களின் மாண்பு, ஒழுக்கம், அடக்கம் ஆகியவை மிளிரும் காட்சி. குகன் கூறுவது போல் அமைந்துள்ள
பாடல் பின்வருமாறு:
“அல்லைஆண்டு அமைந்த மேனி அழகனும் அவனும் துஞ்ச
வில்லைஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல்
எல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்”
பொருள்: இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் தனது கண் இமைக்காமல் காவலாக நின்றான். எனவே அவன்
உறங்கவில்லை.