கீதையும் குறளும் தரும் வாழ்க்கைக்கு உகந்த கருத்துக்கள்

கீதை – குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், 5 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருட பழைமையான குறள் கருத்துகளும், தர்மத்தின்படி நடக்கும் வாழ்க்கைக்கான அறநெறியை மையமாகக் கொண்டவை. பகவத் கீதையைத் தந்த கண்ணன் இறைவனாக வணங்கப்படுகிறார். குறள் தந்த வள்ளுவர் திருவள்ளுவ நாயனாராகப் போற்றி வணங்கப்படுகிறார். கீதை – கடவுள் மனிதனுக்குச் சொன்னது; குறள் மனிதன் மனிதனுக்குச் சொன்னது… – இப்படி சில கருத்துகள் இந்த இரண்டு நூல்களையும் நம் இரு அறிவுப் பொக்கிஷங்களாகக் காணும் நோக்கை அளித்துள்ளன.

பாரதம் இண்டியாவாகி, இண்டியன் வெள்ளைக்காரனாகி, மெக்காலே கல்வியால் மூளை மழுங்கி பண்பாட்டிலிருந்து சரிந்து விழுகின்ற காலமிது. அதனால் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் அனர்த்தங்கள் பெருகியிருக்கின்றன. இன்றைய இந்தியன் வயிற்றுக்காக ஆன்மாவை இழக்க தயாராயிருக்கிறான். முன்னோர்களின் பெருமை ஏதும் இன்றைய தலைமுறையின் தலையில் ஏறவில்லை. வள்ளுவனை, கிருஷ்ணனைத் தெரியாத இந்தியன், தந்தை பெயர் அறியாதவன்தான் என்றால் தவறு ஒன்றுமில்லை. ஆனால், அத்தகைய இழிநிலையில் இன்றைய தலைமுறை இருக்கிறது.

ஆனாலும், இப்போது ஒன்றும் முழு மோசம் வந்துவிடவில்லை. சாம்பலில் நெருப்பாய்… நம் நாட்டில் இன்னும் பண்பாட்டின் உயிர்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஊதி ஊதிப் புதிய வேள்வி செய்துவிட முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைக்கு காரணம், இன்னும் திருக்குறள் நம் கையில் இருக்கிறது. கீதை இருக்கிறது என்பதுதான். அவ்விரண்டு நூல்களிலும் உள்ள ஆன்மிக ஒளி, சூரியனிலும் சந்திரனிலும் இல்லாதது. சூரிய தீபமும் ஒருநாள் அணையக்கூடும். கீதையின் ஒளியோ, குறளின் ஒளியோ என்றும் அணையாது. அது உலகின் கடைசி மனிதனுக்கும் வழிகாட்டும்.

நம் நாட்டில் காணப்படும் கோயில்கள், ஓவியங்கள், சிற்பங்கள், இசை, கவிதை… இவை எல்லாமே ஆன்மிக மெய்மைகளை வெளிப்படுத்தும் கலை வெளிப்படாக விளங்குகின்றன. ஜீராவில்குளோப் ஜாமூன் கூறுவதுபோல், ஆன்மிகத்தில் ஊறிக்கிடந்த உள்ளங்களிலிருந்துதான் இத்தகைய வெளிப்பாடுகள் தோன்ற முடியும்.

ஆயுதங்களுக்கு சாணை பிடிக்கும் யுத்தப் பொழுதிலும் ஆத்ம விசாரணை செய்து கிடந்த மன்னர்களை வரலாறு காட்டுகிறது. தெய்விக உணர்வில் திளைத்துக் கிடந்த கோடான கோடி மகான்கள், ரிஷிகள், கவிஞர்கள் பற்றிய சான்றாதாரங்கள் எத்தனை எத்தனை இலக்கியங்களிலும் பிறவற்றிலும் காணக் கிடைக்கின்றன.

சராசரி மனித வாழ்க்கையும் தத்துவத்தில் ஊறியதாக, தார்மிகம் நிறைந்ததாக இருந்திருப்பதைக் காண முடிகிறது. இதற்கு சான்றுகள் தரமுடியும். தும்மினால்கூட ‘முருகா’ என்பவர்களை இன்றும் இங்கே காணமுடிகிறது. பிறர் மீது கால்பட்டு விட்டால், ‘சிவசிவ’ என்கிறாள் இந்நாட்டுப் பாமரப் பெண். காணும் இடமெல்லாம் பரம்பொருளைக் கண்டு பழகியவர்களின் குடும்பத்தில் பிறந்ததால் வந்த பயன் இது.

கோபுரக் கிளிகளும் வேத மந்திரங்கள் சொல்லும் எனும்படி… வேதம் செழித்த நம் நாட்டில் உலகாயத விஷம் தீண்டி… மக்கள் அஞ்ஞானக் குருடர்கள் ஆகிவருகின்றனர்.

இப்படி ஆன்மிக விழிப்பு  கெட்டு, உறக்கமும் கொட்டாவியுமாக இருக்கின்ற ஒரு சமூகச்சூழலில், குறளையும் – கீதையையும் குறித்து சில சிந்தனைகளை முன்வைக்க விழைகிறேன்.

‘அதுசரி சுவாமி! இந்தக் குறளிலும், கீதையிலும் அப்படி என்னதான் இருக்கிறது?’ என்று சிலர் கேட்கிறார்கள்.

அதில் என்னதான் இல்லை என்ற பதிலை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். குறள், கீதை இரண்டும் மேலோட்டமாகப் பார்த்தால் மிக எளிய நூல்கள். ஆனால், அந்நூலுக்குள் எல்லோரும் மூழ்கி முத்தெடுக்க முடியாது. அதில் அவ்வளவு ஆழம்.

சுவாமி ஓம்காரானந்தர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நல்ல புலமை பெற்றவர். தன்னுடைய எளிமையான சொற்பொழிவுகள் மூலம் மக்களிடம் நல்ல கருத்துகளைப் பரப்பி வருகிறார். முன்னோர் அறிவுச் செல்வங்களை, அடுத்த தலைமுறை உள்ளங்களில் ஆழமாகப் பதியவைக்கும் வல்லமை சுவாமி ஓம்காரானந்தருக்கு உண்டு.