வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன. இனி, சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே சோதனை செய்து, தங்களின் மொபைல் போன் செயலியில் பதிவு செய்வர்.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயை மாற்ற வேண்டும். ரெகுலேட்டர் இயக்கத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதை ஏஜென்சி ஊழியர்கள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்தனர்; 200 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். தற்போது, எண்ணெய் நிறுவனங்கள், காஸ் இணைப்புகளை சோதனை செய்ய எட்டு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளன. அதன்படி, சிலிண்டரில் இருந்து இருந்து காஸ் அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம், அடுப்பு மற்றும் சிலிண்டர் வைக்கப்பட்டிருக்கும் உயரம், சிலிண்டர் இயக்கம், அவசர எண் ‘1906’ குறித்த விழிப்புணர்வு, சமையல் அறையில் தீப்பிடிக்கும் மற்ற பொருட்கள் குறித்து, டெலிவரி ஊழியர்களே ஆய்வு செய்வர்.
விவரங்களை, ஊழியர் தன் மொபைல் போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின், வாடிக்கையாளரின் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, ஒ.டி.பி., எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண் வரும். இதற்கு பின், சோதனை முழுமை பெறும். இந்த சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரெகுலேட்டர், ரப்பர் குழாய் ஆகியவற்றின் பாதிப்பு குறித்து வாடிக்கையாளர்கள் யாரும் தகவல் தருவதில்லை. இதனால் ஏற்படக் கூடிய விபத்துகளைத் தவிர்க்க, தற்போது டெலிவரி ஊழியர்கள் உதவியுடன் ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் செயலியில் வாடிக்கையாளரின் சிலிண்டரில், எந்த தேதியில் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் பொருத்தப்பட்டது என்பது உள்ளிட்ட, சிலிண்டர் தொடர்பான அனைத்து தகவலும் இருக்கும். இதை அடிப்படையாக வைத்து, ரப்பர் குழாய் மாற்றுவது உள்ளிட்டவை இனி, எளிதாக நடந்தேறும். இவ்வாறு அவர் கூறினார்.