காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதரகம் ஊக்கத்தொகை வழங்கியது அம்பலம்

விசாரணை

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. அதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்; சிலர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு கிடைத்து வரும் நிதி உதவிகள் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டில், இது தொடர்பாக, இரண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றப்பத்திரிகை, இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது குறித்து, என்.ஐ.ஏ., மூத்த அதிகாரிகள் கூறியதாவது: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள், யாசின் மாலிக், ஷபீர் ஷா, அந்த்ராபி, ஆலம், தொழிலதிபர் ஜாகுர் அகமது வதாலி ஆகியோருக்கு கிடைக்கும் பண உதவிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இவர்களுடைய, இ – மெயில் தகவல்கள், ‘டிவி’ பேட்டிகள், வீடியோக்கள், பொதுக்கூட்டங்களில் பேசிய உரைகள் உள்ளிட்ட விபரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் அடிப்படையில், மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த பிரிவினைவாத தலைவர்கள், திட்டமிட்டு, மாவட்டம், வட்டம், கிராம அளவில் ஆதரவாளர்களை உருவாக்கி வைத்துள்ளனர். பயங்கரவாதிகளை புகழ்வது, அவர்களுடைய இறுதிச் சடங்குகளில் பங்கேற்பது, பயங்கரவாதத்தில் இளைஞர்கள் ஈடுபட துாண்டி விடுவது போன்றவற்றை செய்கின்றனர். பாக்., தரப்பில் இருந்து வரும் உத்தரவுகளின்படி, பயங்கரவாதத்தை துாண்டிவிட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க வைப்பது, மக்களிடையே பிரிவினை உணர்வை துாண்டிவிடுவது போன்றவை, பிரிவினைவாதிகளின் முக்கிய பணியாக இருந்து வந்துள்ளது.

உத்தரவு

ஒன்றும் இல்லாத பிரச்னைகளுக்கு எல்லாம், போராட்டங்களை நடத்த மக்களை துாண்டி விடுவது, அதில், கல்வீசி தாக்குதல் நடத்துவது போன்ற சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் செயல்களை செய்ய வைப்பதும், பிரிவினைவாத தலைவர்களே. நாட்டில் இருந்து, ஜம்மு – காஷ்மீரை தனியாக பிரிக்க வேண்டும் என்பதே, இவர்களுடைய முக்கிய குறிக்கோளாகும்.

பிரிவினைவாத தலைவர்களை சந்திப்பதற்காக, டில்லியில் உள்ள பாக்., துாதரகம், அவ்வப் போது ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்தும். இந்த சந்திப்புகளின்போது, பிரிவினைவாத தலைவர்களுக்கு, பணத்துடன், சில உத்தரவுகளும் தரப்படும். இதைத் தவிர, பாக்., ஆதரவு பயங்கரவாத அமைப்புகள், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் வர்த்தகம், ‘ஹவாலா புரோக்கர்’ கள் மூலமாகவும், பிரிவினைவாதிகளுக்கு தொடர்ந்து, பண உதவி கிடைத்து வந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

‘பல நாடுகள் அச்சம்’

அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை உயரதிகாரியான, ரண்டால் ஸ்ரிவர் பேசியதாவது: ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது. அதைத் தொடர்ந்து, பாக்., பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல்கள் நடத்துவர் என, பல உலக நாடுகள் அச்சம் அடைந்தன. ஆனால், இது போன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு, சீனா எப்போதும் ஆதரவு அளிக்காது என, நம்புகிறோம். பாக்., மற்றும் சீனா இடையே நீண்டகாலமாக நட்புறவு உள்ளது. அரசியல் மற்றும் துாதரக ரீதியில், பாக்.,குக்கு, சீனா ஆதரவு அளிக்கும். ஆனால், பயங்கரவாதத் தாக்குதலுக்கு அளிக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.