தமிழில் குழந்தைகளுக்கு என பத்திரிகை இல்லாமல் தமிழ் ஹிந்து குழந்தைகள் தவிப்பு!

இரு வாரங்களுக்கு முன் விஜயபாரதத்தில் தமிழ்க் குழந்தைகளுக்காக குரல் கொடுத்திருந்தோம். திருக்கோயில்களில் ஆன்மிக ஒழுக்க நெறி வகுப்பு நடத்தவேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று ஹிந்து அறநிலையத்துறையை கோரியிருந்தோம்.

இந்த இதழில் தமிழ்க் குழந்தைகளின் இன்னொரு கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழில் குழந்தைகளுக்காக என்றே பத்திரிகை கிடையாது. அதுதான் இன்றைய நிலவரம். அம்புலி மாமா இருந்தது. கண்ணன் இருந்தது, கோகுலம் இருந்தது, இதோ நேற்றுவரை சுட்டி விகடன் இருந்தது. இப்போது இல்லை. அதுமட்டுமல்ல, தமிழில் குழந்தைகளுக்கு என உருப்படியாக வேறு பத்திரிகை (மாத, வார…) எதுவும் இல்லை. பலமொழிகளில் வெளிவந்த அம்புலிமாமாவை வெளியிட்டு வந்த மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் அதை நிறுத்தியது. கண்ணனை வெளியிட்டு வந்த பழமையான கலைமகள் நிறுவனம் அதை நிறுத்தியது. கல்கி நிறுவனத்திலிருந்து வெளிவந்த கோகுலம் இதழ் (தமிழ், ஆங்கிலம்) அந்த நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது. விகடன் நிறுவனம் (சுட்டி விகடன்) இதுபோல சமீபத்தில் குழந்தை பத்திரிகையை நிறுத்திய நிறுவனம். விளைவு? தங்களுக்கென வாசிப்பதற்கு பத்திரிகை இல்லாமல் தமிழ்க் குழந்தைகள் இன்று நிராதரவாக நிற்கிறார்கள்.

இதற்காக யார் வெட்கப்பட வேண்டும்? பொது மேடைகளில் தமிழ் வாழ்க முழக்கத்துக்குக் குறைச்சல் இல்லை. அந்தக் கூட்டத்தாரிடம் தமிழ்க் குழந்தைகளின் இந்த தவிப்புக்கு தீர்வு இல்லை. அந்த கூட்டத்தாரும் இதுபற்றி அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.

நாங்கள் முன்னணி பதிப்பாளர்கள், நாங்கள் பழமையான வெளியீட்டாளர்கள், நாங்கள் வெற்றிகரமான பிரசுர நிலையத்தார் என்று தமிழ் பத்திரிகைகள் அச்சடித்து விற்று வியாபார ஏணியில் உச்சியை அடைந்து எக்காளமிடும் கம்பெனியார்கள் குறிவைத்து குழந்தைகளுக்கான தங்கள் பத்திரிகை வெளியீட்டை இழுத்து மூடியது பற்றி யாரும் கேள்வி கேட்கமுடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. பாதிப்பு தமிழ்க் குழந்தைகளுக்குத்தான். தமிழ்க்குழந்தைகளின் இந்த கோரிக்கை கம்பெனியார்களின் காதில் விழுவதற்கான வாய்ப்பும் இல்லை.

தமிழ்க் குழந்தைகளுக்காக திருக்கோயில்களில் ஆன்மிக ஒழுக்கநெறி வகுப்பு நடத்து என்று ஹிந்து அறநிலையத்துறையை அதட்டியதுபோல தமிழ்க் குழந்தைகளுக்காக பத்திரிகை நடத்து என்று அந்த துறையை கேட்பது அபத்தம். துறை அதிகாரிகள் அநாவசியமாக மதசார்பின்மை பேசுவார்கள். அதுமட்டுமல்ல தனியார் பத்திரிகைகளை விட அரசு பத்திரிகை எதுவும் சோபித் ததாக வரலாறு இல்லை. அதுவும் குழந்தைகளுக்கான பத்திரிகை என்றால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்கக்கூடாது என்கிற போது…!

பிறகு யார்தான் தமிழ்க் குழந்தைகளைப் பற்றி கவலைப் படுவது.? தமிழ்க் குழந்தைகளில் 90 சதவீதம் பேர் ஹிந்து குழந்தைகள் என்ற யதார்த்தத்தை வைத்துப் பார்த்தால் ஹிந்து சமுதாயம்தான் குழந்தைகளுக்காக – ஹிந்து குழந்தைகளுக்காக – பத்திரிகை நடத்தும் விஷயத்தில் முன்முயற்சி செய்ய வேண்டும். அதற்கு நாள் பிடிக்கும். ஏனென்றால் ஹிந்து சமுதாயம் இன்று பல ஆக்கிரமிப்புகளின் முற்றுகையில் சிக்கியிருக்கிறது.

தங்களை பிரமாதமான வெளி யீட்டாளர்கள் என்று மார்தட்டிக் கொள்ளாத முன்னணி வர்த்தக நிறுவனங்கள் உண்டு. அந்த நிறுவனம் ஒவ்வொன்றிற்கும் சமுதாய சேவைக்காக லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கவேண்டும் (CSR) என்ற சட்டமும் உண்டு. முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஹிந்து சமுதாயத்தின் எதிர்காலம் பற்றி – ஹிந்துக் குழந்தைகளின் பத்திரிகை  வாசிப்பு பற்றி – மனதார அக்கறை காட்டும் அன்பர்களும் உண்டு. அதனால் ஹிந்துக் குழந்தைகள் தங்களுக்கென பத்திரிகை வரும் என்ற நம்பிக்கை கொள்வதில் அர்த்தமும் உண்டு.