காவிரி விவகாரம்: முதல்வருக்கு விவசாயிகள் கேள்வி

காவிரி விவகாரம் குறித்து விவசாயிகள் சார்பாக, பல்வேறு கேள்விகள் எழுப்பி, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன்.

* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும், பிடிவாதமாக கர்நாடகா தண்ணீர் தர மறுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, வட மாநிலங்களில் வறட்சி பகுதிகளாக மத்திய அரசு அறிவிக்கிறது. அதை செய்ய, தமிழக அரசு இதுவரை மத்திய அரசை வலியுறுத்தவில்லையே ஏன்?

* டெல்டா விவசாய பாதிப்புக்கு, தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஹெக்டேர் ஒன்றுக்கு, 13,500 ரூபாய் அறிவித்துள்ளது. இது எந்த அளவுகோலின் அடிப்படையிலானது?

* காவிரி டெல்டா மாவட்டங்களில், 40,000 ஏக்கர் மட்டுமே குறுவை பாதிப்பு என, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கணக்கெடுப்பு யாரால் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

* கடந்த காலங்களில், இதுபோன்ற பாதிப்புகளுக்கு, ஹெக்டேருக்கு, 20,000 ரூபாய் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது குறைத்து அறிவித்திருப்பது ஏன்?

* முதல்வராக பழனிசாமி இருந்த போது, 20,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டபோது, அதை, 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று, நீங்கள் தானே சொன்னீர்கள்?

* குறுவை பாதிப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வருமாறு, மத்திய அரசை இதுநாள் வரை வலியுறுத்தவில்லையே ஏன்?

* மொத்தமாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் உழவுத் தொழிலாளிகளுக்கு மாற்று திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

* உழவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை ஈடுசெய்ய, உரிய இழப்பீடு கேட்டு, கர்நாடக அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமா?

* சம்பா தாளடி சாகுபடி குறித்த அரசின் நிலைப்பாடு கொள்கை என்ன? வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.