பஞ்சாப்பில் தார்ன்தரன் மாவட்டத்தில் சர்ஹாளி காவல் நிலையம் மீது ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து டி.ஜி.பி.உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.டி.ஜி.பி.கௌரவ் யாதவ் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், “நெடுஞ்சாலையில் இருந்து காவல் நிலையம் மீது ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராணுவமும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.தொழில்நுட்பம் மற்றும் தடய அறிவியல் அடிப்படையில் விசாரணை நடைபெறும்.அதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.அதன்பின்னரே என்ன நடந்தது என்ற முடிவுக்கு வரமுடியும்.ராக்கெட் லாஞ்சரை பறிமுதல் செய்துள்ளோம்” என கூறியுள்ளார்.இந்த சம்பவம் பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த தேசிய தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறுகையில், கடந்த 7 மாதங்களில் 2வது ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.ஆம் ஆத்மி அரசு அமைந்த பின்னர் பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என குற்றம் சாட்டினார்.காவல் அதிகாரி ஒருவர், “முதற்கட்ட விசாரணையில், இந்தத் தாக்குதலில் ராணுவம் சார்ந்த வெடிபொருட்களின் பயன்பாடு, எல்லை கடந்த கடத்தல் விவகாரம் குறித்து தெரிய வந்துள்ளது.இதானால் இதில் உள்ள அண்டை நாட்டின் கைவரிசை தெளிவாக தெரிகிறது.200 ஆளில்லா விமானங்கள் இதுவரை எல்லை கடந்து வந்துள்ளன.தாக்குதல் நடத்திய தூண்டியவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர்.அவர்களுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் உதவி செய்கின்றனர்.இந்த தாக்குதலில் அவர்களது தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.