ஒருநாள் தியாகராச செட்டியாரை நாடி ஓர் ஐரோப்பியர் உறையூருக்கு ஒரு வண்டியில் வந்தார். அவருடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து இறங்கினார். அவர் வந்து இறங்குவதைக் கண்ட பலர் கூட்டமாகக் கூடிவிட்டனர்.
அப்போதுதான் செட்டியார் சிவபூசையை முடித்து உணவுண்டு கையில் ஒரு விசிறியுடன் வந்து புறத்திண்ணையில் அமர்ந்திருந்தார்; முழங்கால் வரையிலுள்ள ஒரு துண்டு மாத்திரம் இடையில் இருந்தது. செட்டியார் துரையை வரவேற்றார்.
“தங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையே, காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த துரை யாரேனும் அனுப்பினார்களா?” என்று கேட்டார் செட்டியார்.
“இல்லை; நானேதான் தங்களைத் தேடி வந்தேன்; மதுரையிலிருந்து வருகிறேன். தமிழ் படித்து வருகிறேன்.”
அந்தத் துரை குழறித் குழறித் தமிழிலே பேசினார். அந்தப் பேச்சிலிருந்தே அவர் ஒரு பாதிரியாராக இருக்க வேண்டுமென்பதைச் செட்டியார் ஊகித்துக் கொண்டார்.
“சந்தோஷம். படிக்கப் படிக்க இனிமை தரும் பாஷை தமிழ்” என்றார் இவர்.
“நான் யாப்பிலக்கணம் படித்தேன். திருக்குறள் படித்தேன். அந்த இலக்கணத்தின்படி குறளைச் சில இடங்களில் திருத்தியிருக்கிறேன். தங்களிடம் காட்ட வந்தேன்.”
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் திடுக்கிட்டார்.
“என்ன, குறளையா திருத்தினீர்கள்?” என்று படபடப்போடு கேட்டார்.
“ஆமாம் எதுகை மோனை சில இடங்களில் சரியாக அமையவில்லை…”
செட்டியாருக்குக் கோபம் மூண்டது.
“தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும்” என்றிருக்கிறதே, இதில் எதுகை நன்றாக அமையவில்லையே. இரண்டாவது அடியை மக்களாற் காணப்படும் என்று திருத்தினேன். அந்தத் திருத்தம் எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது பார்த்தீர்களா?”
அவரை மேலே பேசவொட்டாமல் செய்தது செட்டியாரின் செய்கை. அவர் எழுந்து நின்றார்; தலையிலே அடித்துக்கொண்டார்; காதைப் பொத்திக் கொண்டார். துரை ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் “திருவள்ளுவரைவிடப் புத்திசாலியாகி விட்டீரோ! குறளைத் திருத்த வேண்டுமென்ற இந்த ஞானம் உமக்கு எப்படி ஏற்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! உம்முடைய கையில் சிக்கிச் சீர்குலையவா அதைத் திருவள்ளுவர் இயற்றினார்? எச்சத்தாலென்பதை மக்களாலென்று திருத்தினாராம்! எச்சமென்றும் மக்களென்பதும் ஒன்றாகுமா? இந்த வித்தியாசம் தெரியாதவருக்குக் குறளைக் கையில் தொடுவதற்குக்கூட யோக்கியதை இல்லையே! இந்த மகாபாதகச் செயலைச் செய்தவர் முகத்தில் விழிப்பதே பாவம்.” என்று சொல்லிக் கொண்டே, உள்ளே போய் அவர் கதவை அடைத்துக் கொண்டார். வேறு வழியில்லாமல் துரை வந்த வழியே திரும்பிச் சென்றார்.
இவராவது திருக்குறளை திருத்தி எழுதினார். சில கிறுஸ்தவ பாதிரிகள் திருவள்ளுவரே ஒரு கிறிஸ்தவர் என்றும் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்றும் பொய்யுரைத்து வருகின்றனர். ஏசுவின் சீடரான தாமஸ் சொல்லித்தான் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றும் பிதற்றி வருகின்றனர்.
இந்த பாதிரிகள் தமிழ் படித்ததும் சரி, திருக்குறளை படித்ததும் சரி… தமிழ் மீதுள்ள பற்றினால் அல்ல… தமிழகத்தில் தமிழ் தெரிந்தால் மட்டுமே தங்கள் மதத்தைப் பரப்ப, பிரச்சாரம் செய்ய, மதமாற்றம் செய்ய முடியும் என்பதால் தமிழ் கற்றுக் கொண்டார்கள் என்பது உண்மை.