இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-130 ஜே விமானம், கார்கில் மலைப்பகுதியில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து விமானப்படையின் எக்ஸ் சமூக வலைதளத்தில், “இந்திய விமானப்படையின் சி-130 ஜே விமானம் சமீபத்தில் கார்கில் விமான தளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கியது. விமானப்படையின் கருட் கமாண்டோ படையைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு துல்லியமாக வழிகாட்டும் (Terrain masking) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனையை படைத்தனர்” என பதிவிடப்பட்டுள்ளது.
போர் காலத்தில் எதிரிகளுக்கு தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திடீரென சென்று தாக்குதல் நடத்த டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பம் உதவும் என கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதியில் போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட எத்தகைய சவாலான சூழ்நிலையிலும் திறம்பட செயல்பட இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இந்த சாதனை அமைந்துள்ளது என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தின் தலைநகரம் கார்கில். மலைகளால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 8,780 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரின் வெப்பநிலை மிகவும் மோசமாக இருக்கும். குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கும் கீழ் செல்லும். இப்பகுதி உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.