ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரசில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கட்சித் தலைமையும் உடனடியாக தெளிவாக தன் முடிவை அறிவிக்காத நிலையில் அக்கட்சித் தலைவர்கள் பலர் வெளிப்படையாகவே மத்திய அரசின் முடிவை ஆதரித்தனர்.
ஜனார்த்தன் திவேதி காங். மூத்த தலைவர்:
வரலாற்று பிழை சரி செய்யப்பட்டுள்ளது. நாட்டிற்கே நிம்மதியான விஷயம் இது. நாடு சுதந்திரம் அடைந்த போது மக்கள் தலைவர் ராம் மனோகர் லோகியா உட்பட பல சுதந்திர போராட்ட தலைவர்கள் 370வது பிரிவை விரும்பவில்லை.
தீபிந்தர் ஹூடா ஹரியானா முன்னாள் முதல்வர்:
தேசத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக இதை நான் பார்க்கிறேன். சிறப்பு அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்பது தான் என் எண்ணம். அதை ரத்து செய்ய வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். 21ம் நுாற்றாண்டில் இத்தகைய சட்டப்பிரிவுகளுக்கு இடமில்லை. இதை சரி வர நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது.
மிலிந்த் தியோரா மும்பை காங். தலைவர்:
இந்த விவகாரத்தை விவாதிப்பதே தேவையற்ற ஒன்று. இந்த நாட்டிற்கும் அந்த மாநில மக்களுக்கும் எது நல்லதோ அதை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. காஷ்மீர் பண்டிட் எனப்படும் அந்த மாநில பிராமணர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
அதிதி சிங் ரே பரேலி காங். – எம்.எல்.ஏ.:
சரித்திர சாதனையான இதை அரசியல் ஆக்காதீர்கள். ஒற்றுமையாக இருந்தால் நாம் முன்னேறுவோம். ஜெய் ஹிந்த்!
இவ்வாறு பல காங். தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.