ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது. மேலும், எதிர்காலத்தில் ராகுல் இன்னும் கவனமுடன் இருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது, ‘ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப் பட்ட ஆவணங்கள், ஆதாரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அதை ஏற்கக் கூடாது’ என, மத்திய அரசு வாதிட்டது. இந்தாண்டு, ஏப்., 10ல் நடந்த இந்த வாதத்தின்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை குறிக்கும் வகையில், இந்த தீர்ப்பு குறித்து, காங்., தலைவராக இருந்த ராகுல் கருத்து தெரிவித்தார். ‘சோக்கிதார் எனப்படும் காவலாளி என்று கூறிக் கொள்பவர்கள் திருடர்கள் என்பதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்துவிட்டது’ என, அவர் கூறினார்.
அதையடுத்து, ராகுல் மீது, பா.ஜ.,வைச் சேர்ந்த, மீனாட்சி லேகி, அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.’நீதிமன்றம் கூறாததை, நீதிமன்றம் கூறியதுபோல் கருத்து தெரிவித்துள்ளது, நீதிமன்ற அவமதிப்பு’ என அவர் வழக்கு தொடர்ந்தார். ‘மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கை சந்திக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கூறியது.
தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக, ராகுல் கூறியிருந்தார். ‘ராகுல் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார். அதனால் அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும்’ என, மீனாட்சி லேகி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று(நவ.,14) இந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், இனி வரும் காலங்களில் ராகுல் இன்னும் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.