கல்வி என்பது இன்றிமையாத சேவை. சுதந்திர பாரதத்தில், உண்மையில் சேவை செய வருபவர்களுக்கு மத்திய, மாநில அரசு அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதில் சிறுபான்மை சலுகை என்பது அபத்தமாக அமைந்துள்ளது.
ஆங்கிலேயன் காலத்தில் கூட, பல ஹிந்து கல்வி நிறுவனங்களுக்கு அரசின் சலுகை, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சுதந்திர பாரதத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது, அந்த நிறுவனங்கள் செயல்பாடுகளில் எதற்காகவும் அரசு தலையிட முடியாது என்பதில் தான் ஆபத்து இருக்கிறது.
சிறுபான்மையினர் எனும்போது, மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் என்பவையும் அடங்கும். மொழி சிறுபான்மையினர் பள்ளியில் குறைந்தது ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு வகுப்பு மொழி சிறுபான்மையினர் பயில வேண்டும். ஆனால், மத சிறுபான்மையினர் பள்ளிகள் அவர்கள் மதத்தைச் சார்ந்தவர்களுக்காக இல்லை. ஹிந்துக்களை மதமாற்றவே அப்பள்ளிகள் நடப்பதுதான் ஆபத்தானதாக இருக்கிறது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் இரண்டு பிரிவுகள். ஒன்று, அரசின் முழு உதவியை பெறும் நிறுவனம், மற்றது தனியார் நிறுவனம். கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்பவுவதே இந்நிறுவனத்தின் தலையாய கடமை என அவர்கள் மாணவர் குறிப்பேட்டில் குறிப்பிடுகின்றனர்.
இப்படி பல கோணல்கள் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பற்றிய சட்டத்தில் உள்ளது.
சிறுபான்மை கல்வி நிறுவனம் ஆரம்பிப்பதற்கு முன்பு முறையாக மாநில அரசிடம் அனுமதிக்கு விண்ணப்பிக்கக்கூட வேண்டாம்.
ஆரம்பித்தப் பின்னர் தெரிவித்தால்கூட, முதலில் இருந்து அங்கு பணிபுரியும் ஆசிரியர், பணியாளர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் கணக்குப்படி நிதி அளிக்கப்பட வேண்டும்.
சிறுபான்மையினருக்கு சலுகை, ஆனால் பெரும்பான்மையோருக்கு தண்டனை என்றிருப்பதுதான் கேலிக்கூத்து.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் அரசு தலையிட முடியாது. அதே சமயம், பெரும்பான்மையினரான ஹிந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் எந்த சலுகையும் கிடையாது. ஆனால், ஆயிரம் முட்டுக்கட்டைகள் உண்டு.
அனுமதி பெறாமல் கல்வி நிறுவனங்கள் துவக்க முடியாது. அப்படித் துவக்க சட்டப்படி அனுமதியும் கிடையாது. மேலும் அரசின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வரன்முறைகுட்பட்டு இருந்தாலும் உடனடியாக அங்கீகாரம் கிடைப்பது இல்லை என்ற குறைபாடும் இருக்கிறது.
உதாரணமாக, அரசு பள்ளிக்கூடத்தில் விளையாட்டு மைதானமே இல்லை என்றாலும் பரவாயில்லை. பெரும்பான்மையான ஹிந்துக்கள் கல்வியை சேவையாக நடத்தினாலும், அரசு குறிப்பிடும் அளவிற்கு விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். அதுவும் பள்ளிக்குள்ளே இருக்க வேண்டும்.
பள்ளி அங்கீகாரத்திற்கு வைப்புத்தொகை கட்ட வேண்டும், தகுதியான ஆசிரியர்களைதான் நியமிக்க வேண்டும். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் பின்பற்றப்பட வேண்டும். இப்படி பல கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமல்ல, ஹிந்து தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயிக்கும் கட்டணம் தான் வசூலிக்க வேண்டும். பள்ளி தரும் செலவினங்களை முழுமையாக அரசு நியமிக்கும் நீதியரசர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. உதாரணமாக சுத்தம் சுகாதாரம், பள்ளியில் நடைபெறும் விழாக்கள் முதலானவற்றின் செலவினங்கள் கூட கேள்விக்குட்படுத்தப்படுகிறது.
எப்படி அரசு நடத்தி வந்த கல்விக்கூடங்களில் தமிழ் வழி கல்விக்கு மூடு விழா நடத்தப்பட்டதோ, சிறுபான்மை கான்வெண்ட் கலாச்சாரத்திற்கு தமிழக அரசு திறந்துவிட்டதோ, அதுபோல, ஹிந்து தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு வரன்முறை என்ற பெயரிலும், அரசு நிர்ணய கட்டணம் என்றும் கொடுக்கும் அழுத்தத்தால் பல நிறுவனங்கள் காணாமல் போகின்றன என்பது வேதனையானது.
சிறுபான்மையினர் உரிமை என்ற பெயரில் அவர்கள் தங்களது மதத்தை பரப்பவும் வளர்க்கவும் கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும்.