நாட்டின் கல்விச் சூழலை, இடதுசாரி ஆர்வலர்கள் மோசமாக்கி வருவதாக, பிரதமர் மோடிக்கு, 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் எழுதிய கடிதத்தில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, பல்வேறு இடங்களிலும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இடதுசாரி மாணவர் அமைப்புகள், பல இடங்களில் பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், இது குறித்து கவலை தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடிதம் எழுதியுள்ளனர்.
அச்சம்டாக்டர் ஹரி சிங் கவுர் பல்கலை துணை வேந்தர் ஆர்.பி.திவாரி, தெற்கு பீஹாரின் மத்திய பல்கலை துணை வேந்தர் எச்.சி.எஸ்.ராதோர், சர்தார் படேல் பல்கலை துணை வேந்தர் ஷிரிஷ் குல்கர்னி உள்ளிட்டோர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:மாணவர் அரசியல் என்ற பெயரில், சீர்குலைக்கும் தீவிர இடதுசாரி கொள்கை பின்பற்றப்படுவதை, அச்சத்துடன் கவனித்து வருகிறோம்.
ஜே.என்.யு., ஜாமியா, ஏ.எம்.யு., ஜாதவ்பூர் வளாகங்களில், நடைபெற்ற சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது, நாட்டின் கல்விச் சூழலை, இடதுசாரி ஆர்வலர்கள் சிலர், மோசமாக்கி வருகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.அதிகபட்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தம், தர்ணா, முழு அடைப்பு, என இடதுசாரிகள், போராட்டங்களை கையிலெடுத்து வருவது, அனைவரும் அறிந்தது தான்.
எனினும், நம் நாட்டில், இடதுசாரிகள் நடத்தும் தனி நபர் தாக்குதல், பொது வெளியில் அவதுாறாக பேசுவது, தங்கள் கொள்கைக்கு இணக்கமாக இல்லாதவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் போன்றவை, அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உறுதுணை இதுபோன்ற அரசியலால், ஏழை மாணவர்களும், ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும், பாதிக்கப்படுகின்றனர். இதனால், கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் அம்மாணவர்கள், தங்கள் எதிர்காலத்தை, சிறந்த முறையில் கட்டமைக்க இயலாமல் தவிக்கின்றனர். மாற்று அரசியல் மற்றும் தங்கள் சொந்த கருத்துக்களை வெளிபடுத்தும் சுதந்திரம் கூட இல்லாதவர்களாக, அவர்கள் ஆக்கப்படுகின்றனர்.
பின்னர், வேறு வழியின்றி, பெரும்பான்மை இடதுசாரி அரசியலில், தங்களை இணைத்துக் கொள்கின்றனர். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து, கல்வி சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றிற்கு உறுதுணையாக நிற்கவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.