குரு கோவிந்த சிம்மன்
குரு கோவிந்த சிம்மனுடைய தாயார் மாதா குஜ்ரியுடன் இளைய புதல்வர்களான ஜோராவர் சிங்கும் (9 வயது) ஃபத்தே சிங்கும் (6வயது) கங்கு என்ற வேலையாளால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ஸர்ஹிந்த் பகுதியின் முஸ்லிம் ஆளுனரான வாசிர் கானால் கைது செய்யப் பட்டார்கள். பச்சிளம் பாலகர்களானாலும் அவர்கள் சிங்கத்தின் குட்டிகள். முஸ்லிம் மதத்துக்கு மாற மறுத்துவிட்டதால் உயிருடன் சுவரெழுப்பிக் கொல்லப் பட்டார்கள் (டிசம்பர் 13). அதைத் தாங்க முடியாத குருவின் தாயார் அன்றே உயிரை விட்டுவிட்டார்.
***
ஹிந்துக்களே ஆன சிவாலிக் மலைப்பகுதியில் வாழ்ந்த ராஜபுத்திரர்கள் பொறாமை கொண்டு அனந்தபூரை உள்ளடக்கிய பிலாஸ்பூர் ராஜ்யத்தின் ராஜா தலைமையில் குரு கோவிந்த சிம்மனை வெளியேற்ற முயற்சித்தனர். அவர்களது தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இறுதியில் அவர்கள் கொடுமையாளன் ஔரங்கசீப்பை அழைத்தார்கள். 1705-ம் ஆண்டு டில்லியின் கட்டளைக்கு இணங்க, லாகூர், ஸர்ஹிந்த் பகுதியின் முஸ்லிம் படைகள் அனந்தபூர் வந்து குருகோவிந்த சிம்மன் இருந்த கோட்டையை முற்றுகையிட்டன. சீக்கியர்களின் தீரமான போராட்டம் சில மாதங்கள் நீடித்தது. சீக்கியர்களின் உறுதி எதிரிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. கோட்டைக்குள் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் போராட்டம் தொடர்ந்தது.
***
குரு கோவிந்த சிம்மன் தற்போது தம்தமா ஸாஹிப் என அழைக்கப்படும் தால்வாண்டி ஸாபோ என்ற இடத்தை 1706 ஜனவரி 20 அன்று சென்றடைந்தார். அங்கு 9 மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது ஏராளமான சீக்கியர்கள் அவரை வந்தடைந்தனர். புனித நூலான ஆதி கிரந்தத்தை பாயி மணி சிங்கின் உதவியுடன் திருத்திப் பிரதியெடுத்தார். ஏராளமான அறிஞர்களுடன் பல இலக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காசியை ஒத்த ஒரு கல்வி மையம் போன்று அந்த இடம் தோற்றமளித்தது. அதனால் குருவின் காசி எனப் போற்றப் பட்டது. அவர் ராஜஸ்தானின் பாகோர் அருகில் இருந்த போது (1707 பிப் 20) ஔரங்கசீப்பின் மரணச் செய்தி வந்தடைந்தது. அதன் பின் டில்லியில் ஔரங்கசீப்பின் மகனான மௌஜம், பகதுர் ஷா என்ற பெயருடன் ஆட்சியில் ஏறினான். பதவிச் சண்டை நடந்த அந்த சமயத்தில் அவனுக்கு ஆதரவாக சீக்கியப் படை ஒன்றை குரு அனுப்பினார். பகதுர் ஷாவினுடைய அழைப்பிற்கிணங்கி ஆக்ராவில் அவனைச் சந்தித்துவிட்டு (ஜூலை 23) பஞ்சாபை நோக்கிப் பயணமானார். போகும் வழியிலெல்லாம் குரு நானக்கின் போதனைகளைப் பரப்பிக் கொண்டே சென்றார்.
ஆகஸ்டு 14 அன்று தப்தி நதியைக் கடந்தார். நாந்தேட் என்ற இடத்தில் சென்று தங்கினார். அங்கு மாதோ தாஸ் என்ற பைராகியைச் சந்தித்தார். அவர் சீக்கியராகி குர்பக்ஷ் சிங் என்ற பெயருடன் கால்ஸாவில் இணைந்தார். பந்தா சிங் அல்லது பந்தா பைராகி என்று பொதுவாக அழைக்கப் பட்ட அவருக்கு ‘பந்தா பகதூர்’ என்ற பட்டத்தை குரு வழங்கினார். அவரை ஸர்ஹிந்தின் நவாப் வாசிர்கானைத் தண்டிக்கும் ராணுவத் தளபதியாக நியமித்தார். இந்த வாசிர்கான்தான் குரு கோவிந்த சிம்மனின் இரண்டு மூத்த குமாரர்களின் மரணத்துக்குக் காரணமானவன். இரண்டு இளைய குமாரர்களையும் குருவுடைய தாயையும் மற்றும் ஆயிரக் கணக்கான சீக்கியர்களையும் கொன்றவன்.பந்தா சிங்குக்குக் கால்ஸாவைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப் பட்ட ஐந்துபேரை ஆலோசகர்களாகவும், 25 வீரர்களை மெய்காப்பாளர்களாகவும் நியமித்தார். தனது வாளையும், ஒரு வில்லையும் ஐந்து அம்புகளையும் கொடுத்தார். முகலாய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசியப் போரில் பந்தா பகதூருடன் இணைந்து போரிடுமாறு அறைகூவல் விடுக்கும் ஒரு பத்திரத்தைத் தன் கைப்பட எழுதி அவரிடம் கொடுத்தார்.
***
வாசிர்கான், குருவை நயவஞ்சகமாகக் கொல்வதற்காக ஜாம்ஷெட்கான், வாசில் என்ற இரு பட்டாணியர்களை நாந்தேடுக்கு அனுப்பி வைத்தான். குரு கோவிந்த சிங் ஓய்வில் இருந்த சமயம் அவருடைய அறையில் நுழைந்த ஒருவன் அவரை இதயத்துக்கு சற்றுக் கீழே கத்தியால் குத்திவிட்டான். அவன் இன்னொரு முறை தாக்குவதற்குள் சுதாரித்துக் கொண்ட குரு கோவிந்த சிங் அவனை வாளால் வெட்டி வீழ்த்தினார். சத்தம் கேட்டு வந்த சீக்கியர்கள் மற்றவனைக் கொன்றார்கள்.வைத்தியர்களின் சிகிச்சையால் விரைந்து குணமானாலும் வேறொரு சமயம் வில்லினை இழுக்கும் போது, ஏற்கனவே காயம் பட்ட இடம் மீண்டும் புண்ணாகியது. தனது முடிவு நெருங்குவதை அவர் உணர்ந்தார்.
1708 அக்டோபர் 7-ம் நாள் புதன் கிழமை குருவினுடைய கட்டளைக்கிணங்க தயாசிங், புனித நூலான ஸ்ரீ கிரந்த ஸாகிப்பைக் கொண்டு வந்தார்.குரு ஐந்து காசுகளையும் ஒரு தேங்காயையும் அத்துடன் வைத்து வணங்கினார். பின்னர் சபையினரைப் பார்த்து, இனி தன்னுடைய இடத்தில் அந்த புனித நூலே குருவாக இருந்து வழிகாட்டும் என்றார். இவ்வாறு குரு பரம்பரையின் வாரிசாக நிரந்தரமாக குரு கிரந்த ஸாகிப்பை முறையாக அறிவித்தார். இனி குருவின் ஆன்மா கிரந்தத்திலும் கல்ஸாவிலும் நிலை பெற்றிருக்கும் என அறிவித்தார்.அதே தினத்தில் தனது 41-வது வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார்.
ஹிந்து தர்மத்தின் வாள் கரமாக விளங்கும் சீக்கிய மதத்தின் 10ம் குருவான குரு கோவிந்த சிம்மனின் 350வது பிறந்த வருட கொண்டாட்டங்கள் 2017 ஜனவரி 5 முதல் துவங்குகின்றன.