ராமபிரான் தொடர்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு காலையில் நடந்தது. சகேத் கல்லூரியில் இருந்து ராம்கதா பூங்கா வரை நடந்த இந்த ஊர்வலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் 2,500-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகளும் ராமபிரானின் வாழ்க்கை நிகழ்வுகளை பிரதிபலிக்கும் பொருட்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலையில் ராமபிரான், சீதையுடன் ஹெலிகாப்டர் ஒன்றில் வந்து இறங்குவது போல சிறப்பு காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. பின்னர் அவருக்கு முடிசூட்டும் அடையாள நிகழ்வு, சிறப்பு வழிபாடு என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இந்த விழாவில் ரூ.226 கோடிக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அயோத்தி நகர் மற்றும் அங்குள்ள சரயு நதிக்கரையில் சாதனை முயற்சியாக 5.51 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதில் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால் நகர் முழுவதும் ஒளிவெள்ளத்தில் மிதந்தது.