கர்ப்பிணியர் ஆரோக்கியத்தில் அரசு விளையாடக் கூடாது

‘தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கர்ப்பிணியருக்கான நிதியுதவி திட்டம், இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்டு உள்ளது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்கள் நல திட்டங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகின்றன. மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தினர். பட்டியல் பிரிவு மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பினர். தமிழக பள்ளி மாணவர்களை தேசிய விளையாட்டு போட்டிக்கு அனுப்பாமல், அவர்கள் வாய்ப்பை பறித்தனர். அரசு மாணவர் விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்றாமல் புறக்கணித்தனர். தற்போது, கர்ப்பிணியருக்கான நிதியுதவி திட்டத்தையும், இரு ஆண்டுகளாக முடக்கி உள்ளனர். மத்திய அரசு ஒதுக்கும் நிதி, நம் சகோதரிகளுக்கு சென்று கிடைக்கவில்லை என்றால், எங்கே செல்கிறது? கர்ப்பிணியர், குழந்தைகள் ஆரோக்கியத்தில் விளையாடக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.