கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பா.ஜ., தலைவர் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. அவருக்கு மொத்தம் 106 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக குரல் ஓட்டளித்தனர்.
கர்நாடக மாநிலத்தில், கடந்த 2018 ல் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 225 தொகுதிகளில், பா.ஜ., 105 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 34 மற்றும் பகுஜன் சமாஜ் ஒன்று, சுயேட்சைகள் 2 பேர் வென்றனர். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் முதலில் பா.ஜ.,வின் எடியூரப்பாவையே கவர்னர் வாஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்திருந்தார். எனினும், தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அப்போது எடியூரப்பா தோற்றார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ., மற்றும் ஒரு சுயேட்சை வென்றனர். எனவே, ஆளும் கூட்டணியில் அதிருப்தி எழுந்தது. இதனால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் அரசு மீது அதிருப்தி தெரிவித்து தங்கள் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர்.
எனினும், கடந்த ஜூலை 23 ல் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி தோற்றார். அவருக்கு 99 பேர் தான் ஆதரவளித்தனர். 107 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழந்தது.
இந்தநிலையில் நேற்று, (ஜூலை 28) கர்நாடக சபாநாயகர் ராஜினமா செய்திருந்த 17 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்தார். அதன்பின்னர் இன்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், மொத்தமிருந்த 208 பேரில் எடியூரப்பாவிற்கு ஆதரவாக குரல் ஓட்டெடுப்பில் 106 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பி்ன்னர் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், தனது பதவியை ராஜினமா செய்தார். அவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.