இரண்டு நண்பர்கள் கங்கைக் கரைக்குச் சென்றார்கள்.
அப்போது கங்கையில் ஒரு கருப்பு கம்பளிமூட்டை மிதந்து வந்துகொண்டிருந்தது.
நண்பர்களில் ஒருவன் மற்றொருவனிடம், ‘‘நீரில் மிதந்து வரும் அந்தக் கம்பளிமூட்டையை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன்” என்று கூறினான்.
அதற்கு நண்பன், ‘‘அந்தக் கம்பளிமூட்டை கங்கையில் மிதந்து போனால் போகிறது. அதை நீ போய் எடுக்காதே!” என்று கூறினான்.
அவன் கூறியதை முதல் நண்பன் கேட்கவில்லை. அவன் கங்கையில் நீந்திச் சென்று, தன் கைகளால் கம்பளி மூட்டையைக் கரைக்குப் பிடித்து இழுத்தான்.
ஆனால் அந்தக் கம்பளிமூட்டையை அவனால் கரைக்குக் கொண்டுவர முடியவில்லை. அவன் எவ்வளவோ முயற்சி செய்தான். முடிவில் அந்தக் கம்பளி மூட்டையுடன் சேர்ந்து அவனும் நதியில் மிதந்தான்.
இதைப் பார்த்த கரையிலிருந்த நண்பன், ‘‘நதி கம்பளிமூட்டையுடன் உன்னையும் சேர்த்து அடித்துக்கொண்டு போகிறதே! அந்தக் கம்பளி போனால் போய்த்தொலையட்டும். நீ கரையேறி வந்துவிடு!” என்று கூவினான்.
கம்பளியுடன் சேர்ந்து நீரில் மிதந்து கொண்டிருந்த நண்பன், ‘‘நான் கம்பளியை எப்போதோ விட்டுவிட்டேன். அந்தக் கம்பளிதான் இப்போது என்னை விடமாட்டேன் என்கிறது!” என்று பதிலுக்குக் கூவினான்.
விஷயம் இதுதான்:
நதியில் ஒரு கரடி மிதந்து சென்றது. அதை முதல் நண்பன் ‘கம்பளிமூட்டை’ என்று தவறாக நினைத்து, எடுப்பதற்காகக் கங்கையில் நீந்திச் சென்று அதைப் பற்றினான்.
தன்னைப் பற்றியவனை கரடி பிடித்துக்கொண்டது. விஷயம் தெரிந்ததும் அவன், கரடியை விட்டுவிட்டு கரையேறுவதற்கு முயற்சி செய்தான். ஆனால் கரடி அவனைப் பலமாகப் பிடித்திருந்ததால், அவனால் கரடியிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவனையும் கரடியையும் சேர்த்தே ஆற்றுவெள்ளம் அடித்துச்சென்றது.
கதையில் சொல்லப்பட்டவன், கம்பளி என்று எண்ணி எடுக்கப்போய் கரடியிடம் மாட்டிக்கொண்டான். அதனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் முடியாமல், அவன் துன்பம் அனுபவிக்க நேர்ந்தது.
இப்படித்தான் மனிதர்கள் முதலில் பலவிதமான ஆசைகளையும் வேண்டாத பழக்கங்களையும் வளர்த்துக்கொள்கிறார்கள். பின்னர் ஒரு சமயம் அவற்றிலிருந்து அவர்கள் விடுபட நினைத்தாலும், அவைகள் அவர்களை விடுவதாக இல்லை.