சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வெள்ளநீர் புகுந்ததால் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பாழாகின. அக்கடைகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதிகனமழையால் சென்னை மற்றும்அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மாநகரில் உள்ள பல ரேஷன் கடைகளில் வெள்ளநீர் புகுந்தது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள 1,318 கடைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,113 கடைகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 834 கடைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 641 கடைகள் ஆகியவற்றை, விடுமுறை நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. வெள்ளநீர் புகுந்த கடைகளில், அடிப்பகுதியில் இருந்த ஏராளமான அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகள் தண்ணீரில் ஊறி பாழாகின. நேற்று கடையைத் திறந்தபோது, மூட்டைகள் எல்லாம் பூஞ்சாணம் பூத்துக் கிடந்தன. கடைகளுக்குள் சென்ற தொழிலாளர்கள், இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டனர். கடும் துர்நாற்றத்துக்கு நடுவே, கடைகளுக்குள் தேங்கிய நீரை வெளியேற்றினர். பாதிப்படைந்த மூட்டைகளையும், பாதிப்பில்லாத மூட்டைகளையும் தனித்தனியே எடுத்து வைத்தனர்.
வெள்ளநீர் புகுந்த ஒரு சில கடைகளில் பாமாயில் மட்டும் வழங்கப்பட்டது. சில கடைகளில் கணக்குக்காக சுமார் 10 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. பாதிப்பில்லாத கடைகளிலும் குறைந்த அளவே பொருட்களை வாங்க வந்தனர். இதுகுறித்து கடைக்கு வந்த பொதுமக்கள் கூறும்போது, “பலருக்கு அரசின் அறிவிப்பு தெரியாது. வெள்ளிக்கிழமை கடைக்கு விடுமுறை எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நாங்களே இவ்வழியாகச் செல்லும் போது பார்த்துவிட்டு பொருட்களை வாங்க வந்தோம்” என்றனர்.
பாதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கடை ஊழியர்கள் பாதிப்பை புகைப்படம் எடுத்து, காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக உயரதிகாரிகளுக்கு அனுப்பினர். ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை தயாரித்தும் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அதைக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “வெள்ளத்தால் சேதமடைந்த கடைகளுக்கு ஏற்பட்ட இழப்பை, அரசு ஈடுசெய்ய வேண்டும். நிறுவனங்கள் கணக்கில் சேர்க்கக் கூடாது. பெரு வெள்ளம் ஏற்படக் கூடிய பகுதிகளில் கடைகளை உயரமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.