திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்கு சொந்த மான நிலங்கள், கட்டிடங்கள் சென்னை, புதுச்சேரி, மறைமலை நகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளன. திருப்போரூர் அருகே காலவாக்கம் கிராமத்தில் எஸ்.எஸ்.என். என்ற தனியார் பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரி வளாகத்துக்குள் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான, 9 ஏக்கர் 47 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குத்தகை அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், இந்த நிலத்தை தாங்கள் எடுத்துக்கொள்வதாகவும் அதற்கு பதிலாக வேறு இடம் கொடுப்பதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன்படி காலவாக்கம் கிராமத்தில் கல்லூரி வளாகத்தில் உள்ள ரூ.79 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 9 ஏக்கர் 47 சென்ட் கோயில் நிலத்தை கல்லூரிக்கு வழங்குவது என்றும் அதற்கு பதிலாக சிறுதாவூர் கிராமத்தில் உள்ள ரூ.10 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 17 ஏக்கர் 68 சென்ட் நிலத்தை கல்லூரி சார்பில் பெற்றுக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு நிறுவனத் தலைவர் எம்.கே.எஸ். சந்திரகுமார் கூறியதாவது: கோயில் நிலங்களை அறநிலையத் துறை பராமரித்து பாதுகாக்க வேண்டும். அதை விற்பனை செய்வதற்கோ, பரிவர்த்தனை செய்வதற்கோ எவ்வித உரிமையும் கிடையாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது. மேலும், கல்லூரி வளாகத்துக்குள் விவசாய நிலம் இருந்தால் அதற்கு வழிவிட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. கோயில் நிலத்தின் மதிப்பு ரூ.80 கோடியாகும். பரிமாற்றம் என்ற முறையில் கோயில் நிலத்தை தனியாருக்கு கொடுக்க கூடாது. இந்த நடவடிக்கைக்கு ஒத்துக்கொண்டால், பலர் இதேபோல கோயில்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு மற்றும் குத்தகைக்கு எடுத்து, வேறு இடம் கொடுப்போம் என சொல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிலத்தை கல்லூரி நிர்வாகம் குத்தகை எடுத்து பயன்படுத்தி வருகிறது. 3 ஆண்டுகள் கழித்து கல்லூரி நிர்வாகம் குத்தகையை புதுப்பிக்கவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, நாங்கள் ரூ.54 லட்சம் வைப்பு தொகை செலுத்தியுள்ளோம். அத்தொகையின் வட்டியை வாடகையாக வைத்துக் கொள்ளுமாறு கூறினர். இதில் கோயில் நிர்வாகத்துக்கு சரியான உடன்பாடு ஏற்படவில்லை. உடனே கல்லூரி நிர்வாகம், அறநிலையத் துறையினரிடம் நில பரிவர்த்தனை பிரிவில், நிலம் பரிமாற்றம் தொடர்பாக கோரிக்கை வைத்தது. அதிலும் அறநிலைய துறைக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கல்லூரி நிர்வாகம் என்ன கூற வருகிறது என ஆய்வு செய்யும்படி, நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மற்றபடி நிலம் பரிமாற்றம் தொடர்பாக எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றனர்.