கதிராமங்கலங்கள் கூறும் சேதி – வளர்ச்சி விரோத விதண்டாவாதம்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் ஆயில் கிணறு கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பொதுவாக ஏற்கெனவே இயங்கி வரும் கிணறுகளை, சுத்தப்படுத்தும் பணி வழக்கமான ஒன்று. 8000 முதல் 10,000-ம் அடி ஆழம் வரை சுத்தம் செய்யும் போது, மிகப் பெரிய ரிக் இயந்திரம் கொண்டு தான் சுத்தப்படுத்த முடியும். அவ்வாறு சுத்தப்படுத்தும் போது தான் கதிராமங்கலம் போராட்டத்தை தொடங்கினார்கள்.

ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆயில் கிணறை சுத்தம் செய்வதற்காக சென்ற ஓ.என்.ஜி.சி. பணியாளர்களை தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, இயங்கும் கிணறையும் மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்…

700 கிணறுகள்

ஓ.என்.ஜி.சி. தமிழகத்தில் 700 கிணறு வரை தோண்டி அதில் ஆயிலும் வாயுவும் எடுத்து வந்திருக்கிறார்கள். பயன்படுத்தி முடித்த கிணறுகள் பாதுகாப்பாக மூடப்பட்டு மீண்டும் நிலத்தைக் கொடுத்த விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைத்து விடுகிறார்கள். நெல், கரும்பு விவசாய நிலம் என்றால் ஏக்கர் 1-க்கு ரூ.75,000-மும், மற்றநிலங்கள் என்றால் ஏக்கர் 1-க்கு ரூ.63,000 மும் ஆண்டுக்கொரு முறை வழங்கி வருகிறார்கள். ஓ.என்.ஜி.சி. இப்போது 166 ஆயில் கிணறுகளில் உற்பத்தியை நடத்தி வருகிறது.

ஓ.என்.ஜி.சி. தமிழகத்தில், 35 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. இதுவரை ஓ.என்.ஜி.சி.க்கு நிலம் கொடுக்க முடியாது என்றோ, கொடுத்ததை மீண்டும் தாருங்கள் என்றோ, கொடுத்த நிலத்திற்கு குத்தகைப் பணம் தரவில்லை என்றோ எந்தக் குற்றச்சாட்டும் எழவில்லை.

பொதுவாக மழையினால் ஏற்பட்ட வறட்சியால், குடி தண்ணீர்த் தட்டுப்பாடு தமிழகம் எங்கும் உருவாக்கியுள்ளது. 100 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர் இப்போது 200 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. பல பகுதிகளில் குடிநீர் உப்பு நீராக மாறுகிறது போன்ற குற்றச்சாட்டுகள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும்… இதற்கு முக்கிய காரணம் மழை இல்லாமையே. தவிர ஓ.என்.ஜி.சி. காரணம் அல்ல.

நியாயமற்ற போராட்டம்

தமிழகத்தின் பல பகுதிகளில் 1000 லிருந்து 1500 அடி வரை நீர்மட்டம் கீழே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 50 ஆண்டு கால தமிழக ஆட்சியாளர்கள் நீர் மேலாண்மையை ஒழுங்காக கடைப்பிடிக்காததே இந்நிலைக்கு காரணம்.

நெடுவாசல், கதிராமங்கலம் என போராட்டத்தை விரிவு படுத்தி தமிழகத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓ.என்.ஜி.சி.யை விரட்டலாம் என்று சிலர் திட்டமிடுகிறார்கள் இது நியாயமா? கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு மட்டும் 2020 கோடி ரூபாயை ஓ.என்.ஜி.சி. அளித்திருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை வழங்கி வருகிறது. இந்தியாவின் அதிகமான செலவினமாக இருப்பது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், ஆயிலும் கேசும் தான். இதை குறைக்க வேண்டியே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 2020-க்குள் ஆயில் இறக்குமதியில் 10 சதவீதம் குறைத்திட வேண்டும் என்பதும் ஒரு இலக்கு.

இதன் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பிற்கும் பயன்படுத்தலாம் என்று திட்டமிடுகிறார். மற்றொரு பக்கம் நெடுவாசல், கதிராமங்கலம் தொடங்கி நாடு முழுவதும் மக்களிடம் பீதியை ஏற்படுத்தி நாட்டில் உள்ள மொத்த எண்ணெய்க் கிணறுகளையும் மூடச் செய்யலாம் என்று சிலர் தீய எண்ணத்தோடு செயல்படுகிறார்கள்.

தமிழகத்தின் நிலை இது என்றால்.. ஆந்திராவில் தலைகீழ்! அங்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ‘சிங்கிள் விண்டோ’ (ஒற்றைச் சாளரம்) முறையை ஓ.என்.ஜி.சி.க்கு என்று தனியாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஓ.என்.ஜி.சி. எப்போதும், எங்கு வேண்டுமானாலும் உற்பத்தியை தொடங்கலாம் என்றும், ஓ.என்.ஜி.சி. அனுமதிக்காக பல்துறை அதிகாரிகளைச் சந்தித்து கால விரயம் ஏற்படாமல் ஒற்றைச் சாளர முறை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இதை தமிழக மக்கள்  புரிந்து கொள்ள வேண்டும். ஆந்திராவில்  ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க் கிணறுகள் இரண்டு மடங்கு!

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில் எண்ணெய்க் கிணற்றில் இருந்து Collection Pointக்கு செல்லும் சிறிய குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. தகவல் தெரிந்து கசிவை நிறுத்தி சரிசெய்திட இருபதே நிமிடங்களில் ஊழியர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கசிவை நிறுத்த விடவில்லை. எண்ணெய் கிணற்றை பிளாக் செய்து மூடினால் தான் கசிவை நிறுத்த முடியும். அதற்கும் இடம் கொடுக்கவில்லை. இதில் சிலர் கசிவாகி நிலப்பரப்பில் பரவியிருந்த எண்ணெய்ப் படிவங்கள் மீது அங்கிருந்த வைக்கோலைப் பரப்பி தீ வைக்கிறார்கள். மாலை 4 மணி வரை உயர் அதிகாரிகள் வரும்வரை எண்ணெய் கிணற்றை மூடவோ, குழாய்க் கசிவை சரிசெய்யவோ விடவில்லை. இதன் மூலம் பேராபத்து ஏற்படும் நிலையில் தான், அங்கு கைது நடவடிக்கையிலும், தடியடியிலும் காவல் துறை ஈடுபட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடித்து வைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

இந்த தடியடி சம்பவத்தில் அப்பாவி பெண்கள், மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அது, வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதே… ஆனால் காவல் துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால், மிகப் பெரிய விபத்து ஏற்படும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 12,000க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகள். ஓ.என்.ஜி.சி.யின் கீழ் இயங்கி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை?

(கட்டுரையாளர் பாஜகவின் மாநிலச் செயலர்)